கண்மணி குணசேகரன்…
வட்டார எழுத்துக்களில் நடுநாட்டு மக்களின் வாழ்வைப் பேசும் படைப்பாளி. அந்த மக்களின்
வாழ்க்கையை, அந்த மண்ணுக்கேயுரித்தான முந்திரிக்காட்டின் மொழியை தொடர்ச்சியாக தன் படைப்புகளில்
வெளிப்படுத்திக்கொண்டிருப்பவர். கவிதைகள்,
சிறுகதைகள், கட்டுரைகள், நாவல் என்று பல தளத்திலும் இயங்கிவரும் சீரிய படைப்பாளி. கி.ரா,
பெருமாள் முருகன் போல் வட்டாரச் சொல்லகராதி கொணர்ந்தவர். ஆறு ஆண்டு கால தீவிர உழைப்பில்
கண்மணி கொண்டுவந்த நடுநாட்டுச் சொல்லகராதி நூல் அவரது மிக முக்கியமான ஆக்கம். சம கால
தமிழ்ப் படைப்பாளிகளில் மிக மிக முக்கியமானவர் கண்மணி குணசேகரன்.
கண்மணியின் முதல்
நாவல் ’அஞ்சலை’ ஒரு மகத்தான நாவல். தமிழ்ப்புனைவுலகில் அஞ்சலை மிக முக்கியமான பெண்
பாத்திரம். அஞ்சலையைத் தொடர்ந்து வெளிவந்த கண்மணியின் இரண்டாவது நாவல் ’கோரை’. ஒரு
எளிய விவசாயியின் கதை. இவ்விரண்டு நாவல்களிலிருந்தும், தன் வழக்கமான, கதைப்போக்கிலிருந்தும்
சற்று விலகி வேறு ஒரு தளத்தில், அதாவது தான் பணியாற்றும் போக்குவரத்துத் தொழில்துறை
சார்ந்து புனையப்பட்ட படைப்பே கண்மணியின் மூன்றாவது நாவலான நெடுஞ்சாலை.
கண்மணி குணசேகரன்
ஐ.டி.ஐ படித்தவர். மெக்கானிக்காக விருத்தாலசம் அரசு போக்குவரத்துப் பணிமனையில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.
அவர் தன் வேலை சார்ந்த வாழ்க்கையை புனைவாக்கிய முயற்சியே நெடுஞ்சாலை.
பேருந்தில் பயணம்
செய்யாத மனிதர்களே இருக்கமுடியாது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவதொரு பேருந்தோடு ஒரு நெருக்கமான
பந்தம் இருக்கத்தான் செய்கிறது. பேருந்தை தொட்டுக்கூடப் பார்த்திராத பெருந்தனக்காரர்களைப்
பற்றி சொல்லவில்லை. அன்றாட வாழ்வில் ஒரு பேருந்தின் சினேகம் அவசியம் தேவைப்படும் எளிய
நடுத்தர மக்களையே குறிப்பிடுகிறேன். என் பால்ய நினைவுகளில் முதல் முதலாக எங்களூருக்கு
வந்த மினி பஸ்ஸின் தடம் இன்னும் பதிந்திருக்கிறது. ஒவ்வொரு பயணத்தையும் எதிர்வரும்
ஏதாவதொரு பேருந்து தீர்மானித்த என் இளவயது நினைவுகளும்.
பயணங்களைப்போல
உற்சாகமான வேறொன்று நிச்சயமாக இருக்க வாய்ப்பில்லை. நெடுந்தூரமானால் என்ன இதோ இந்த
முக்கில் ஏறி அடுத்த முக்கில் இறங்கிக்கொண்டு ’வர்றேண்ணே’ என்று ட்ரைவரைப் பார்த்துக்
கையசத்தபடியே பெருமிதமாக நடந்து வரும் குறும் பயணமாக இருந்தாலென்ன உற்சாகம் ஒன்றுதான்.
அப்படியான பயணங்கள் எனக்கு நிறைய வாய்த்திருக்கின்றன. உங்களில் பெரும்பாலானோருக்கும்
வாய்த்திருக்கலாம்.
இப்படி நம் வாழ்வில்
தினம் தினம் நாம் எதிர்கொள்ளும் ஓட்டுனர் நடத்துனர்களின் தொழில் சார்ந்த சிக்கல்களை,
நாம் கடந்துசெல்லும் பணிமனைகளில் நாமறியாத ஒரு உலகம் இருக்கிறது என்பதை நம்மில் எவரேனும்
அறிந்திருப்போமா? இதோ நெடுஞ்சாலையில் அந்த வாழ்க்கையை அப்பிடியே அச்சு அசலாகப் பதிவு
செய்திருக்கிறார் கண்மணி குணசேகரன்.
விருத்தாச்சலம்
அரசுப் போக்குவரத்துப் பணிமனை தான் கதைக்களம். சி.எல்லாகப் பணிபுரியும் மூன்று இளைஞர்கள்.
அவர்களின் வாழ்வு. நம்பிக்கைகள், நம்பிக்கையின்மைகள், காதல், காமம், நட்பு. பிள்ளையில்லாத்
துயர், தொழில் நெருக்கடிகள், மேலதிகாரிகளின் துரத்தல்கள், துறை சார்ந்த விசாரணைகள்,
தெரிந்தும் தெரியாமலும் நிகழும் தவறுகள், தண்டனைகள், காத்திருப்பு, சின்ன சின்ன சந்தோஷங்கள்
என்று வலி மிகுந்த அவர்களின் வாழ்க்கையை நுட்பமாகப் பதிவு செய்கிறது நாவல். துறை சார்ந்த
பேச்சுக்கள், சங்கேத வார்த்தைகளால் முதலில் ஒரு பிடி கிடைக்காமல் போய் போகப்போக அந்த
சூழல் பழகிவிட நாவலில் ஆழ்ந்துபோக முடிகிறது.
வெவ்வேறு பின்புலங்களிலிருந்து
வரும் தமிழரசன், அய்யனார், ஏழைமுத்து என்று மூன்று இளைஞர்கள். தற்காலிகப் பணியாளர்களாக
(Casual Labours) விருத்தாச்சலம் அரசுப்போக்குவரத்துக் கழத்தில் வேலைக்குச் சேர்கின்றனர்.
டிரைவர், கண்டக்டர், மெக்கானிக் என்று மூன்று வேறுவேறு பணிச்சூழல்கள். இவர்களில் மெக்கானிக்
அய்யனார் மட்டுமே எம்ப்ளாய்மெண்ட் சி.எல். அதுவும் முறையான ஆர்டர் வந்து பணியில் சேர்ந்தவனில்லை.
(’ஏதோ மளிகைக்கடையில் கைச்சாத்து கொடுக்குறமாதிரி டெலிகிராம் சீட்டை கையில் கொடுத்து
சி.எல்லாகப் போட்டுவிட்டார்கள்’) எனவே அடையாள அட்டைகூட கிடையாது. முறையான பணி உத்தரவு
வரும் என்று மாதக்கணக்கில் காத்திருப்பவன். அய்யனாரின் அம்மாவோ பையனுக்கு பெரியாரில்
வேலை என்பதால் பெரிய வரதட்சனை கிடைக்கும் இடமாகப் பெண் தேடிக்கொண்டிருக்கிறார். அய்யனாருக்கு
அதில் துளியும் விருப்பமில்லை. ஐ.டி.ஐ முடித்தும் மெக்கானிக் தொழில் கற்றுக்கொள்ளாமல்
கொத்தனார் வேலை பழகி அதில் தீவிரமாக இருந்தவன். டிப்போ வேலை கிடைத்ததும் அதைவிட்டுவிட்டு
இதில் ஒட்டிக்கொண்டான். கொத்தனார் வேலையை விட நல்ல சம்பளமில்லை என்றாலும் ஏதோ சொல்லிக்கொள்ளும்படி
ஒரு வேலை என்பதாலும், நிரந்தரமாகிவிட்டால் அரசு வேலைக்காரனாக எதிர்காலத்தை அச்சமின்றி
கடக்கும் சாமன்யனின் நம்பிக்கையும் கொண்டு கட்டு மாத்திக்கொண்டு டயர் கழட்டிக்கொண்டு
ஏச்சுப்பேச்சுக்கள் தாங்கி காலம் கடத்திக்கொண்டிருக்கிறான்.
தமிழரசன் செட்டியார்
வீட்டுப்பையன். வீட்டுக்கு ஒரே வாரிசு. மளிகைக்கடை யாவாரியான அப்பன்செட்டியிடமே ஒட்டிக்கொண்டு
எத்தனை காலம்தான் காலம் கடத்துவது என்று திடீரென்று ஞானோதயம் தோன்றி கண்டக்டர் லைசன்ஸ்
எடுத்து வைக்கிறான். தனியாரில் வேறொரு முதலாளிச் செட்டியின் ட்ரான்ஸ்போர்ட்டில் கொஞ்ச
காலம் ஓடி அந்த முதலாளியின் நடவடிக்கைகளால் வாழ்க்கையே வெறுத்துப்போய் வேலையை விட்டு
ஓடி வந்து சிபாரிசு பிடித்து பெரியாரில் சி.எல்லாக சேர்கிறான். தமிழ், சரியான சாமர்த்தியசாலி.
யாரை எங்கே அடித்தால் விழுவார்கள் எனும் சூட்சுமம் அறிந்தவன். சி.எல்களிலேயே இவன் ஒரு
ஸ்பெஷல் சி.எல். கும்பிடு போட்டே எதையும் சாதிக்கும் டைப். கண்ட்ரோலரை காக்கா பிடித்து
அவருக்கு வேண்டியதை செய்துகொடுத்து டெய்லி டூட்டி வாங்கிவிடுகிறான்.
டிரைவர் ஏழைமுத்து
அப்பாவி. பெயருக்கேற்ற வாழ்க்கைச்சூழல். டிரைவராக அரசுப்பேருந்தை எடுக்கும் முன் இவனுக்கிருக்கும்
ஒரே முன் அனுபவம் உழவுக்காட்டில் டிராக்டர் ஓட்டியதுதான். அவ்வளவு பெரிய பஸ்ஸை நகர்த்தித்
திருப்ப பிரம்மப் பிரயத்தனம் செய்யவேண்டியிருக்கிறது. எவ்வளவு முயற்சித்தும் ஸ்டியரிங்
பிடிபடவே மாட்டேனெங்கிறது. திக்கித் திணறியபடியே ஓட்டுகிறான் வண்டியையும் வாழ்க்கையையும்.
வீட்டில் வேறொரு அக்கப்போர், பிள்ளையில்லாத் துயர், அம்மாவின் அராஜகப் பேச்சுக்கள்.
நிம்மதியற்ற வாழ்வு.
இப்படி இம்மூவரினூடாகத்தான்
பயணிக்கிறது நெடுஞ்சாலை. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வலிகள், காயங்கள். நெடுஞ்சாலைப்
பயணத்தில் பல்வேறு கிளைச்சாலைகளும். முக்கியமாக பணிமனை சார்ந்த வாழ்வை அசலாக படம்பிடித்துக்
காட்டுகிறார் கண்மணி. கிளை மேலாளர் (Branch Manager), உதவிப் பொறியாளர் (Assistant
Engineer) என்று சதா நேரமும் துரத்திக்கொண்டேயிருக்கும் மேலதிகாரிகள். மெக்கானிக்குகள்,
க்ளீனர்கள், அப்ரண்டிஸ்கள், கேட் வாட்ச்மேன், டீசல் பிடிப்பவர், வந்துசெல்லும் வாகன
ஓட்டிகள், கண்டக்டர்கள், கணக்குப் பிள்ளைகள் என்று பல்வேறு பாத்திரங்கள். இரவுப் பணியின்
தொந்தரவுகள், தூக்கக் கலக்கம், இடைவிடாது வந்து விழுந்துகொண்டேயிருக்கும் ஏ.யி யின்
உத்தரவுகள் என்று இருபத்தி நான்கு மணிநேரமும் ஓரு பரபரப்பான சந்தையைப் போன்றிருக்கும்
பணிமனையின் காட்சிகள். ஒரு பார்வையாளனாக எல்லாவற்றையும் துல்லியமாக வாசகனால் பார்க்கமுடிகிறது.
குழந்தையை பொருட்காட்சிக்கு அழைத்துச் செல்லும் தந்தையைப் போல கைபிடித்துக் கூட்டிச்செல்லும்
கண்மணியின் அபாரமான எழுத்து நடை ஏதொன்றையும் விட்டுவிடாமல் பணிமனையின் இண்டு இடுக்கிற்கெல்லாம்
கூட்டிச்சென்று காட்டுகிறது.
கண்மணி குணசேகரனின்
எழுத்துக்களின் சிறப்பான எள்ளல் கலந்த ஒருவித அங்கத நடை வாசிப்பை சுவாரஸ்யமாக்குகிறது.
நாவலெங்கும் இறைந்து கிடக்கிற நகைச்சுவைகளை வெறுமனே சிரித்து கடந்துவிட முடியவில்லை.
அதனுள்ளாகப் பொதிந்திருக்கும் வலியையும் உணரமுடிகிறது. எனினும் சில இடங்களில் வெடித்துச்
சிரித்ததையும் சொல்லித்தான் ஆகவேண்டும். மாலை நேர ஓட்டை ஒடிசல் பேருந்தில் கரண்ட் வயரை
கட் பண்ணிவிட்டு கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி இருட்டில் சில்மிஷம் செய்யும் இளவட்டங்களிடம்
பாவப்பட்ட பஸ் டிரைவர் பேசும் பேச்சு ஒரு உதாரணம். இன்னும் நிறைய நிறைய சிரிக்கச் சிரிக்க
வலியைப் பேசுகிறார் கண்மணி.
தமிழரசன் – கலைச்செல்வி
காதல் அத்தியாயங்கள், ஏழைமுத்து – கனகா இடையிலான சொல்லிக்கொள்ளா பழைய நேசம். அய்யனார்
– சந்திரா விற்கு இடையிலான அன்பு. என்று நெகிழ்ச்சியான பக்கங்களும் கலங்கடிக்கின்றன.
கணவன் வண்டியோட்டும் பேருந்தில் ஒருமுறையாவது பயணிக்க விரும்பும் பார்வதி. டிக்கட்
கேட்கும் கண்டக்டரிம் ’எங்க வீட்ல அண்ண’ என்று கணவன் சொன்னதும் பார்வதிக்கு ஏற்படும்
பெருமிதம். இப்பிடி சின்ன சின்ன சந்தோஷமான அபூர்வமான தருணங்களை அழகாக எழுதிச்செல்கிறார்
கண்மணி.
நாவலின் பதினாறாவது
அத்தியாயத்தை குறிப்பிட்டே ஆகவேண்டும். இந்த ஒரு அத்தியாயம் போதும் கண்மணியின் எழுத்து
வன்மைக்கு. அப்படி ஒரு நேர்த்தி. நாவலில் எத்தனையோ கதாபாத்திரங்கள்
வந்துபோனாலும் கெஸ்ட் ரோல் மாதிரி
இந்த அத்தியாயத்தில் மட்டும் வந்துபோகும் சந்திரா
மனதைவிட்டு அகல மறுக்கிறாள். நாவலின்
இந்த ஒரு பகுதி மொத்த
நாவலின் தரத்தையும் பல படிகளுக்கு உயர்த்துகிறது.
தரமான சிறுகதையைப் போன்றிருக்கும் இந்த அத்தியாயத்தை மட்டும்
ஒரு குறும்படமாக எடுக்கலாம்.
நாவல் இரண்டு பகுதியாகப்
பிரிக்கப்பட்டிருக்கிறது. முதல் பகுதியில் பிரதானமான கதைப்போக்கு விவரிக்கப்படுகிறது.
இரண்டாவது பகுதியில் எதிர்பாராமல் நேர்ந்துவிடும் ஒரு சங்கடமான சூழல் சொல்லப்பட்டுள்ளது.
ஏழைமுத்து, தமிழரசன் இருவரும் ஒரு தர்மசங்கடமான நிலையில் விருத்தாச்சலம் – கோணாங்குப்பம்
ஸ்பெஷல் ஓட்டப் பணிக்கப்படுகிறார்கள். அது ஒரு லொட லொட ஓட்டை ஒடிசல் கண்டம் வண்டி.
இந்த ட்ரிப்போடு பெரியாருடனான தொடர்பை முடித்துக்கொள்வோம் என்று நினைத்து அந்த சிங்கிள்
செல்லும் இருவருக்கும் பேரிடியாக வந்து சேர்கிறது ஒரு செய்தி. கண்டமான இந்த வண்டியை
கோணாங்குப்பத்திலிருந்து சென்னை வரை ஓட்டிச்செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் சிக்கிக்கொள்கிறார்கள்.
அனுபவமில்லாத டிரைவர், கண்டம் வண்டி உயிரைக் கையில் பிடித்தபடி ஒரு பயணம். திக் திக்கென்று
கடந்துசெல்லும் பக்கங்கள்.
நாவலின் இறுதியில்
தொழில்நுட்பச் சொற்களுக்கான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. கண்மணி குணசேகரன் தனது இந்த
நாவலை ‘ராப்பகலாய் கண்சோராது தன்னுயிராய் பயணியர் உயிர் பேணும் பேருந்து ஓட்டுநர்களுக்கு’
சமர்பித்துள்ளார்.
நாவலெங்கும் விரவிக்கிடக்கும்
வட்டார வழக்கு படைப்பின் மீதான வாசக நெருக்கத்தை அதிகரிக்கிறது. தித்திப்பான நடுநாட்டின்
மொழி நாவலை வாசித்து முடிக்கையில் நமக்கும் தொற்றிக்கொள்கிறது.
நாவலை வாசித்து
முடித்ததும் தோன்றியது இதுதான்…
‘எனுமா எழுதியிருக்க
கண்மணி அண்ண’
புகைப்படங்கள் - நன்றி http://www.jeyamohan.in/


