ஒருமுறை நண்பன்
கேட்டான். ’எப்போது பார்த்தாலும் வெயில், மழை, குளிர், புழுதி என்றே புலம்பிக்கொண்டிருக்கிறாயே?
இங்கே அதை எழுதுவதால் என்ன பயன்?’ என்று. ’எல்லோரும் அவரவர் வாழ்வனுபவங்களை எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
கரடுமுரடான ஒவ்வொரு அனுபத்திலிருந்தும் மற்றவருக்குத் தெரிந்துகொள்ள ஏதோ ஒன்று இருக்கிறது.
நான் என் அனுபவத்தை பதிவு செய்து வைக்க விரும்புகிறேன்’. என்று பதில் சொன்னேன். எதற்காக
இப்படி மொக்கையாக ஒரு விளக்கம் சொல்கிறேன் என்றால் இந்தப் பதிவு ஒரு சுய புலம்பல்.
’வெறுமையின் பள்ளத்தாக்கில்’ வகையில் இன்னொன்று. விருப்பமில்லாதவர்கள் விலகிக்கொள்ளலாம்
என்று சொல்வதற்காகவே.
இப்போதெல்லாம்
எழுதுவது என்பதே மறந்துபோய்விட்டது எனக்கு. கோர்வையாக ஒரு நாலு வரி எழுதுவதற்குள் மூச்சு
முட்டிப்போகிறது. எழுதி டெலீட் செய்தவைகள் அதிகம். மனநிம்மதி இல்லாத சூழல். கடுமையான
நெருக்கடிகளில் என்ன எழுதிவிட முடியும். என்ன நடக்கிறது என்பதை எட்டிப் பார்த்துக்கொள்வதற்கும்
நானும் இருக்கிறேன் என்று சொல்லிக்கொள்வதற்காகவும் மட்டுமே இணையத்தில் இருக்கிறேன்
போல. கடந்த நான்கைந்து மாதங்களாகவே கழுத்து நெறிபடும் அளவிற்கான அவஸ்தைகள். இதிலிருந்து
விடுபட்டு அல்லது இந்த நெருக்கடிகளையெல்லாம் மறந்து ஓடிச்சென்று ஒளிந்துகொள்ள கூகுள்
பஸ் ஒரு நல்ல இடமாக இருந்தது எனக்கு. அவ்வப்போது ஃபேஸ்புக்கும்.
இணையத்தில் வாசிப்பவர்களின்
எண்ணிக்கை இப்போது ரொம்பவே அதிகரித்திருக்கிறது என்று தான் நினைக்கிறேன். ஒரு நல்ல
வாசகன் இணையத்தை நிச்சயம் புறக்கணித்துவிட முடியாது. தேடித் தேடி வாசிப்பது நல்ல அனுபவமாக
இருக்கிறது. அடர் கானகத்தில், பெருமழையில், பாலைவனச் சூட்டில், நெருப்புக்குவியலுக்கு
மத்தியில், பாறை இடுக்குகளின் வழியாக, என்று பாதைகளை உருவாக்கியவாறு புதையல் தேடிச்செல்லும்
குதிரை வீரனின் பயணத்தைப் போல் இந்த இணையப் பயணமும் சாகசங்கள் நிறைந்ததாகவே இருக்கிறது.
சமயங்களில் ஒவ்வொரு இழையிலிருந்தும் ஒரு முத்து கிடைத்துவிடுகிறது. விலைமதிப்பில்லாத
முத்து. வேலையில்லாமல் இணையமே கதியென்று கிடந்த இந்த நாட்களில் அப்படி பல்வேறு முத்துக்களைப்
பெற்றேன். வாசித்து வாசித்து தீர்த்தேன். இன்னும் நிறைய மிச்சமிருக்கிறது. நான் சென்று
என்னைப் புதைத்துக்கொள்ள எனக்கென்று இந்தப் பாலையில் ஓரிடம் உள்ளதென்றால் இந்த வாசிப்பு
மட்டும் தான்.
அதிதீவிர வாசகர்கள்
எல்லாம் இணையத்தில் இருக்கிறார்கள். அவர்களோடு ஒப்பிட்டால் நான் ஒன்றுமேயில்லை தான்.
ஆனால் ஏன் ஒப்பிடவேண்டும். இந்த ஒப்பீடு எனக்கு எப்போதுமே உவப்பானதில்லை. ஆனால் அவர்களிடம்
எனக்குப் பெருமதிப்பு உண்டு. ஒவ்வொருவரிடமிருந்தும் ஒன்றைக் கற்றுக்கொள்கிறேன். நான்
அறியாத எவ்வளவோ விஷயங்களை, ஜஸ்ட் லைக் தட் ’இங்கே பார் இதுதான் அது… தெரிந்துகொள்’
என்று சொல்லிப் போகிறார்கள். ஆச்சர்யமாக இருக்கிறது. எப்படி ஒரு தேடல் இருந்தால் இதெல்லாம்
சாத்தியமாகும். அவர்களுக்கெல்லாம் என் வணக்கங்கள். இந்தத் தேடல் என்பது எவ்வளவு உயிர்ப்புள்ள
ஒன்றாக இருக்கிறது. லௌகீக இடர்களையெல்லாம் மறந்து முகமூடிக்குள் இருக்கும் அசல் முகத்தை
சிதைந்துபோகவிடாமல் அப்படியே வைத்திருக்கச்செய்வது இந்தத் தேடல் தானே. இப்பிடித் தேடுவதையும்,
தேடிக்கண்டடைவதையும் பெரிதும் விரும்புகிறேன். அப்படி என்றேனும் ஒருநாள் என்னையும்கூட
தேடிக் கண்டுபிடிக்கவேண்டும்.
மேலும் இன்னொன்றும்
உள்ளது. எனக்கு விருப்பமான சிலர். அற்புதமான எழுத்துக்காரர்கள், வீண் இணைய அரட்டைகளில்
தங்கள் சுயம் தொலைத்து தங்களுக்கு வேறுவிதமான பிம்பங்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
சில நேரங்களில் சலிப்பாக இருந்தாலும் எப்போதாவது வெளிவரும் அவர்களின் ஏதாவது ஒரு புனைவெழுத்து
அவர்கள் பால் ப்ரியம் கொள்ளச்செய்துவிடுகிறது. மனதைத் தொடும் எழுத்து எங்கிருந்து வந்தாலும்
ஓடிச்சென்று அதை அணைத்துக்கொள்வதையே விரும்புகிறேன்.
இரண்டு வாரங்களுக்கு
முன்பு ஒரு செவ்வாய்க்கிழமை அது. மழை வலுத்துப் பெய்துகொண்டிருக்கிறது. ஆஸ்பெஸ்டாஸ்
கூரையில் மழைத்துளி பட்டுத் தெறிக்கும்போது சடசடவென்று அது எழுப்பும் சப்தம் மூலமாய்
மழையின் அளவை கணக்கிட்டுக்கொண்டிருக்கிறது மனம். மெதுவாக ஒரு சாரலை உணர்ந்துகொண்டிருக்கும்போதே
மெல்ல வலுவடைந்து உக்கிரமாக பெய்து தீர்க்கிறது. போகட்டும் உணர்வதா மழை? மழையென்றால்
நனைவதுதானே சரி. அதுதானே மழைக்குச் செய்யும் மரியாதை. வீட்டிற்கு வரும் விருந்தாளியைப்போல
ஓடிச்சென்று வரவேற்கவேண்டாமா? அதுவும் இங்கே சவுதியைப் பொறுத்தவரை வராது வந்த மாமணியல்லவா
மழை. ஆண்டுக்கு ஒருமுறையோ இருமுறையோ சின்ன தூறல் போல வந்து தன் இருப்பைச் சொல்லிவிட்டுப்போகும்
மழை. இப்போதெல்லாம் கொஞ்சம் தீவிரமாகவே பெய்யத் துவங்கியிருக்கிறது. அப்படிப் பெய்யும்
அபூர்வ மழையில் ஓடிச்சென்று நனைவதையெல்லாம் கற்பனைகூட செய்து பார்க்கமுடியவில்லை. இங்கே
இக்கொடுங்குளிர் நேரத்தில் பெய்யும் மழையில் ஒரு பறவையைப்போல கூட்டுக்குள் அடைந்துகொள்வதுதான்
வாய்த்திருக்கிறது.
சுற்றிலும் மணல்
காடு. கிட்டத்தட்ட இருபது கேம்ப்கள் இருக்கலாம் இங்கே. ஹஃபூபிலிருந்து ஹவியா செல்லும்
நெடுஞ்சாலையையொட்டி ஒரு குட்டி கிராமத்தைப்போல இந்த இடம். ஒரு திரைப்பட செட் போல உருவாக்கப்பட்டிருக்கும்
டெம்ப்ரவரி குடில்கள். கண்டெய்னர்களால் செய்யப்பட்டது. வராண்டாவில் யாரோ ஒரு சக தொழிலாளி
நடந்து செல்லும் திம் திம் ஓசை, அடுத்த அறையில் தூங்கிக்கொண்டிருப்பவரின் குறட்டை ஒலி,
சுற்றிலுமான வாகன இரைச்சல்கள், ஒவ்வொரு கேம்ப்பிலும் கூட்டம் கூட்டமாக வசிக்கும் நாய்களின்
விடாத குரைப்புகள் என்று சப்தங்களால் சூழப்பட்டிருக்கிறது எமது பாலைவன கிராமம். மழையோ
குளிரோ எதையும் பொருட்படுத்தாது நெடுஞ்சாலையில் விரைந்துகொண்டிருக்கின்றன வாகனங்கள்.
இரவு பத்து மணிக்கு மேல் தான் இந்த வாகன இரைச்சல்கள் கொஞ்சம் ஓயும். அதனாலெல்லாம் ஒன்றும்
பிரச்சனையில்லை. கும்மிருட்டு நேரத்தில் வெளிச்சப்புள்ளிகளை உமிழ்ந்துகொண்டு மினுக்கட்டாம்
பூச்சிகளைப் போல இடவலமாகப் பறந்துகொண்டே இருக்கும் வாகனங்களினால் என்ன பிரச்சனை இருந்துவிட
முடியும். ஆனால் எல்லோருக்குமா அது மினுக்கட்டாம் பூச்சியாக இருக்கிறது.
அந்த மழை நாளுக்கு
முந்தைய தினமே மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு பள்ளிகளுக்கெல்லாம் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இரவிலிருந்தே மெல்ல மெல்ல தொடங்கி தீவிரம் காட்டிய பெருமழை ஏற்கனவே ஏழு டிகிரி
குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த எங்களை மேலும் நடுக்கமுறச் செய்து நடமாட்டங்களை முடக்கிவைத்தது.
பாலைவனத்திற்கு நடுவில் இருப்பதால் ரொம்பவே ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். ஏதேனும் சின்ன
அசம்பாவிதம் ஏற்பட்டால் 50 கிலோமீட்டர் தாண்டி ஹஃபூப் தான் செல்லவேண்டும். இங்கே அருகிலுள்ள
அராம்கோவில் முதலுதவி சாதனங்கள் மட்டும்தான் உள்ளன.
மழை, குளிர், கோடை
என்று எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ள இங்கு யாவரும் தயார் தான். ஆனால் வேலையற்று சும்மா
இருப்பதுதான் ஒவ்வொருவரின் மனதிலும் தீயாய்ச் சுடுகிறது. சவுதி அராம்கோவின் மெயின்
காண்ட்ராக்டர்களில் எங்கள் நிறுவனமும் ஒன்று. ஐந்து வருடங்களுக்கு முன்னால் அப்கேக்,
சட்கம், உத்மானியா என்று ஒருசேர மூன்று பெரிய ப்ராஜெக்ட்கள் கிடைத்தபோது பம்பரமாய்
சுழன்று சுழன்று ஓடியது வேலை. எவருக்கும் ஓய்வில்லை. விடுமுறையை கனவில் கூட நினைக்கமுடியாது.
போராடிப் போராடித்தான் ஒவ்வொரு முறையும் ஊர் செல்ல முடிந்தது. இப்போதோ நிலமை தலைகீழ்.
மூன்று ப்ராஜெக்ட்களுமே முடிவுற்று வேலைகள் ஏதும் இல்லாத நிலை. மொத்தமாக ஆட்களை ஊருக்கு
அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். கான்ட்ராக்ட் முடியாத ஆட்களைக்கூட ’ஊருக்குப் போய்வாருங்களேன்
அடுத்த ப்ராஜெக்ட் வரும்போது அழைக்கிறோம்’ என்று சொல்லி அனுப்பியாகிவிட்டது. மிகச்சில
அலுவலர்கள் மட்டுமே எஞ்சியிருக்கிறோம். புதிய ப்ராஜெக்ட்டுக்கான டாக்குமெண்ட் வேலைகள்
நடந்துகொண்டிருக்கின்றன. ’சரி எங்களையும்கூட அனுப்பித் தொலைத்துவிடுங்கள்’ என்று நாங்களும்
தினசரி விண்ணப்பங்களையும் வேண்டுகோள்களையும் விடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். ’இல்லை,
கொஞ்சம் பொறுங்கள்’ என்று சொல்லியே பொறுமையை சோதித்துக்கொண்டிருக்கின்றனர்.
எவ்வளவு காலம்
தான் சும்மாவே இருப்பது. ஆனால் ஊருக்குச் செல்வதைப்பற்றியும் நினைக்க முடியவில்லை.
கலக்கமாகவே இருக்கிறது. இந்த வேலை இல்லையென்றால் அடுத்து என்ன என்ற கேள்வி பூதாகரமாக
முன் நின்று பயமுறுத்திக்கொண்டிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பாக உத்தரபிரதேசத்தை
சேர்ந்த எனது சக அலுவலர் ஒருவர் நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துவிட்டார்.
சும்மாவே சலுகைகள் எதையும் காட்டாத கம்பெனி இப்போது கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டது.
அவர்களுக்கு இது மிகப்பெரிய மானப்பிரச்சனை. கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தவர்களுக்கு
கம்பெனி கொடுக்கும் மரியாதைகளையெல்லாம் முன்பு கேட்டு நடுங்கியிருக்கிறோம். இப்போது
நண்பர் கோர்ட் படியேறியதற்குப் பின் நிறுவனம் தன் கோர முகத்தைக் காட்டத் தொடங்கிவிட்டதை
நேரடியாகப் பார்த்து மிரண்டுபோய் இருக்கிறேன். அந்த உ.பி நண்பரை கேம்ப்பிலிருந்து வெளியேற்றிவிட்டது
நிறுவனம். ’கோர்ட் தீர்ப்பு வரும்வரை இந்தப் பக்கமே வரக்கூடாது’ என்று சொல்லி விரட்டிவிட்டார்கள்.
அவர் கோபரில் உள்ள தன் உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். அடுத்து என்ன நடக்குமோ
என்று கலக்கத்துடன் கவனித்துக்கொண்டிருக்கிறோம்.
வரும் ஜனவரியில்
புதிய வேலைகள் தொடங்கிவிடும் என்று நம்பிக்கையாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நானும்
நம்பிக்கையோடு காத்துக்கொண்டிருக்கிறேன். இல்லையென்றால் ஜனவரியில் ஊருக்குப் புறப்படவேண்டியிருக்கலாம்.
எப்பிடியிருப்பினும் என்னை அனுப்ப அவர்கள் தயாராக இல்லை என்பது மட்டும் தெளிவாக எனக்குப்
புரிகிறது. புது வேலைகள் தொடங்காவிட்டால்கூட ரஹிமா விற்கு ரெண்டலுக்கு அனுப்பியதைப்போல்
வேறு எங்காவது அனுப்புவார்கள் என்று நினைக்கிறேன். சமயங்களில் கடுமையாக வெறுப்பு ஏற்படத்தான்
செய்கிறது. ஆனாலும் மற்றவர்களைப் போல் தலைமையலுவலகம் சென்று கோப முகம் காட்டுவதற்கும்
தயக்கமாக இருக்கிறது. ஐந்து ஆண்டுகளாக கம்பெனியில் நான் சேர்த்துவைத்திருக்கும் நன்மதிப்பைக்
கெடுத்துக்கொள்ள எனக்கு விருப்பமில்லை. ’இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருந்து பார்க்கலாம்’
என்று எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன். ஆனாலும் காலம் இப்படியேவா போய்விடும்.
இடையில் லௌகீகம்
சார்ந்து ஏற்படும் பொருளாதார நெருக்கடிகள் தான் என்னைப் பாடாய்ப்படுத்துகின்றன. முன்பு
ஒரு மருத்துவ அவசரத்திற்காக நண்பரொருவரிடம் வாங்கியிருந்த பெரும் கடன் தொகையும் அதன்
காரணமாய் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மனத்தடைகளும் வேறு மனதைக் கசக்கிப் பிழிகிறது. இதன்
நடுவே இந்த மாத முதல் வாரத்தில் நடைபெற்ற வேறு ஒரு மனச்சங்கடம் வேறு என்னை செயலிழக்கச்
செய்துவிட்டது. அப்படியே உறைந்துபோய் நின்ற நிமிடங்களை வேதனையோடு நினைத்துக்கொள்கிறேன்.
இதற்கும் அதே சமாதானத்தைத்தான் வைத்திருக்கிறேன். ஆனாலும் காலம் இப்படியேவா போய்விடும்.
ஆக இதெல்லாம் எனக்கு
நடந்துகொண்டிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாதபடியான சோதனையான காலகட்டம். வேறு எவருக்கோ
இதெல்லாம் நடந்துகொண்டிருப்பது போலவும் நான் தள்ளி இருந்து இவற்றையெல்லாம் வேடிக்கை
பார்த்துக்கொண்டிருப்பது போலவும் கூட தோன்றுகிறது.
எல்லோரும் சற்று
நிம்மதியாக வாழும் காலம் ஒன்று வரும் என்று சுந்தர ராமசாமி ’ஒரு புளியமரத்தின் கதை’
நாவல் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பாரே அப்படி ஒரு காலம் தான் இப்போதைக்கு என் கனவு.
10 கருத்துரைகள்:
உங்களின் ஏனைய பதிவுகளை படித்ததைவிட ஆற்றாமை கொளல் விதியின் படி தாங்கள் எழுதிவரும் சுயபுராணங்களை மட்டும் தவறாமல் வாசித்துவிடுவதுண்டு..
இருத்தலின் இருப்பை காட்டிவிடு
நல்லது நடக்கும்ணே.. don't worry..
உங்களுக்காக ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன்.
நிம்மதியாக வாழும் காலம் உடனே கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.
நீங்களே சொல்லியிருப்பது போல் இந்த காலமும் கடந்து போகும். வருத்தம் வேண்டாம்.
\\இப்போதெல்லாம் எழுதுவது என்பதே மறந்துபோய்விட்டது எனக்கு. கோர்வையாக ஒரு நாலு வரி எழுதுவதற்குள் மூச்சு முட்டிப்போகிறது. எழுதி டெலீட் செய்தவைகள் அதிகம்.\\
உங்களோடு என்னை ஒப்பிடுவது தவறுதான். என்றாலும் நானும் இதே நிலையில் தான் இருக்கிறேன்:((
இதுவும் கடந்து போகும்..
அடிக்கடி இப்படி விரக்தியாக எழுதுவதுபோலத் தோன்றினாலும், வாசக நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளவே என்பதும் புரிகிறது. மனக்கவலைகள் பகிரப்படும்போது, மனம் லேசாகும் அல்லவா.
செருப்பில்லாதவன், காலில்லாதவனை நினைத்து ஆறுதல அடைவதைப் போல, இப்படி எழுதி பகிரும் வாய்ப்புகூட இல்லாதவர்களை நினைத்து, மனம் தளராமல் இருக்க வேண்டியதுதான் நாம்.
இதுவும் கடந்துபோகும். இரவு விடிந்தே தீரும்.
@ வசந்த்
//ஆற்றாமை கொளல் விதியின் படி தாங்கள் எழுதிவரும் சுயபுராணங்களை மட்டும் தவறாமல் வாசித்துவிடுவதுண்டு.//
அடப்பாவி.. சுயபுராணமெல்லாம் நான் அதிகமா எழுதுனதில்லையே தம்பி. :) இருந்தாலும் கருத்துரைக்கு நன்றி புது மாப்பிள்ளை அவர்களே..
@ க.ரா
@ பழனியப்பன் கந்தசுவாமி
@ உலக சினிமா ரசிகன்
@ மோகன் குமார்
@ வித்யா
மிக்க நன்றி.
@ ஹுஸைனம்மா
நன்றி. எப்போதாவது இப்படி விரக்தியாக எழுதும்படி நேர்ந்துவிடுகிறது.
நண்பா
கவலப்ப்டாதீர்கள்,எல்லாம்சரியாகிவிடும்.21ஆம் தேதி சனிப்பெயர்ச்சி உங்களுக்கு இங்கே பொழிச்சலூர் சனிஸ்வ்ரனுக்கு அர்ச்சனை செய்து விடுகிறேன்.நல்லதே நடக்கும்.
@ கீதப்ப்ரியன்
நண்பா ரொம்ப நன்றி. எப்பிடி இருக்கீங்க? வீட்ல எல்லோரும் நலமா? குழந்தைகளுக்கு என் அன்பு.
எல்லாம் சீக்கிரம் சரியாகிடும் நண்பா. சரியாகலைன்னா விட்ருவோமா? :) நம்பிக்கை இருக்கு.
கருத்துரையிடுக