இது ஒரு மனநிலை. ஆண்டு இறுதியில் மொத்தமாக ஒரு வருடத்தைத் திரும்பிப் பார்த்தல். எனக்கு இந்த டெம்ளேட் அவ்வளவாக விருப்பமில்லையெனினும் இப்பிடி ஒருமுறை திரும்பிப் பார்ப்பது மனதுக்கு நிறைவான ஒன்றாகவே இருக்கிறது. என்னவெல்லாம் செய்தோம் என்று நிறை குறைகளை ஆராய்ந்து சுயபரிசோதனை செய்துகொள்வதற்கு இந்த திரும்பிப் பார்த்தல் உதவுகிறது. நிறைகளை நினைத்து மகிழும் அதே நேரத்தில் குறைகள், செய்த தவறுகள் எல்லாம் வருத்தமளிக்கும் நினைவுகளாக எஞ்சியிருக்கின்றன. ஒரு கால எந்திரம் கிடைத்தால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு மீண்டும் சென்று சில தவறுகளை சரி செய்ய ஆசை. அந்த மாதத்தில் இருந்துதான் எல்லாமே தவறாக ஆனது. அடிமேல் அடி தொடங்கியது அப்போதிருந்து தான். ஃபேண்டஸி சினிமாக்களில் வருவது போல பின்னோக்கிப் பாய்தல் நிஜவாழ்விலும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். யதார்த்தத்தில் இதெல்லாம் சாத்தியமில்லை தான். ஆனால் இப்படி கடந்த சென்றுவிட்ட ஒரு நாளுக்குள் நுழைந்து பழைய தவறுகளை சரிசெய்ய ஒரு வாய்ப்பு கிடைக்காதா? என்பதும் ஒரு ஏக்கமாகவே இருக்கிறது. ஆனால் அடுத்த நொடிக்குள் எத்தனை ஆச்சர்யங்கள், அதிர்ச்சிகள், ஆனந்தங்கள் ஒளிந்திருக்கின்றன. இப்படி அடுத்த நொடி என்னவென்று தெரியாத மர்மம் தான் வாழ்வின் சூத்திரமோ?
கடந்த 26 ம் தேதியன்று ஒரு சம்பவம். தமாம் சீக்கோ கட்டிடத்தில் உள்ள ஒரு இண்டர்னெட் சென்டரின் மாடியில் உள்ள கேபின் ஒன்றில் அமர்ந்திருந்தேன். திடீரென்று கண்கள் இருட்டி தொண்டை கசந்து வாந்தி வருவது போல் ஒரு உணர்வு தோன்றியது. உடனே தண்ணீர் குடிக்கவேண்டும் என்று நினைத்து அவசர அவசரமாக மெயிலை சைன் அவுட் செய்து எழுந்தேன். அவ்வளவு தான் நினைவிருக்கிறது. ஒரு இரண்டு நிமிடங்களுக்குப் பின்னர் லேசாக உணர்வு திரும்பியபோது தான் தெரிந்தது. மயக்கமடைந்திருந்ததும் அருகிலிருப்பவர்கள் ஓடி வந்து தூக்கி உட்காரவைத்திருப்பதும். கொஞ்ச நேரத்திற்கு என்னவென்றே புரியவில்லை. குளிரிலும் உடம்பெல்லாம் வியர்த்திருந்தது. இண்டெர்னெட் உரிமையாளர் சிசி கேமராவில் பார்த்து ஓடி வந்திருந்தார். ஒருவர் ஏ.சி யை ஆன் செய்தார். ஒருவர் ஓடிச்சென்று ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கி வந்தார். குளிர்ந்த தண்ணீரும் சில்லென்ற ஏ.சி காற்றும் அந்த நேரத்திற்கு சற்று இதமாக இருந்தது. கூடவே இதுபோன்ற சக மனிதர்களின் உதவும் மனப்பான்மையும்.
ஆனால் அடுத்தடுத்த கேள்விகளால் கிலி ஏற்படுத்தினர். 'என்ன பாஸ் வீட்ல ஏதாவது பிரச்சனையா?' என்றார் ஒரு தமிழ் நண்பர். வீட்டில் ஏதாவது பிரச்சனை என்றால் மயக்கம் வருமா என்ன? அப்படி மயக்கம் வருவதாக இருந்தால் நான் இருபத்தி நான்கு மணி நேரமும் அன்கான்ஷியசில் தான் இருப்பேன். வேறொருவரோ 'ஹார்ட் அட்டாக்கோன்னு நெனச்சேன்' என்று ஷாக் கொடுத்தார். மற்றொருவர் ஒருபடி கூடுதலாக 'ஆள் அவுட்டுன்னு நெனச்சி பயந்துட்டேன்' என்று என்னை பயமுறுத்தினார். அடப்பாவிகளா கொஞ்சம் இருந்தா தூக்கிட்டுப் போய் அடக்கம் பண்ணிடுவாங்க போலிருக்கே என்று நினைத்துக்கொண்டேன். கஃபேயின் உரிமையாளர் 'ஐயா சாமிகளா கிளம்புங்க, எனக்குத் தெரிஞ்சவர் தான் நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லி அனைவரையும் துரத்தினார். ரொம்ப நல்ல மனிதர். 'வாங்க ஹாஸ்பிடல் போலாம் என்று சொல்லி கைபிடித்து அழைத்துச் சென்றார். 'சும்மா லோ பிபி யா இருக்கும், பயப்படாதீங்க' என்று ஆறுதல் சொல்லி நான் சகஜமாகும் வரை உடனிருந்தார். அவரிடம் நன்றி சொல்லி விடைபெற்ற பின்னர் நண்பர் அப்துல் காதரை சந்தித்துவிட்டு டாக்ஸி பிடித்து ஹாஸ்பிடல் சென்றேன்.
சவுதியில் மருத்துவமனைக்கு செல்வதென்பது ஒரு பெரிய இம்சை. முக்கியமாக நான் செல்லும் அல்ஷிபா மருத்துவமனை. பெரும்பாலும் மிஸ்ரி, ஸ்ரிலங்கன் மருத்துவர்கள் தான் இங்கு. நமக்கு என்ன பிரச்சனை என்று சொல்லிப் புரியவைப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும். இதற்காகவே நான் பெரும்பாலும் அலுவலக சவுதி பி.ஆர்.ஓவையும் அழைத்துக்கொண்டுதான் செல்வேன். இம்முறை நல்லவேளையாக ஒரு மலையாள டாக்டர் இருந்தார். பி.பி, ஈ.சி.ஜி என்று முழுதாக ஒரு மணி நேரம். இதற்குள் அலுவலக நண்பர்கள் வேறு வந்திருந்தனர். 'ரொம்ப டிப்ரஷன்ல இருக்கீங்க, நல்லா ரெஸ்ட் எடுங்க' என்றார் மருத்துவர். 'நாலஞ்சு மாசமாவே அதத்தான செஞ்சுக்கிட்டு இருக்கேன்' என்று நினைத்துக்கொண்டேன்.
ஆனாலும் இப்படி ஒரு பொது இடத்தில் இப்படி நினைவு தப்பி விழுந்தது ரொம்பவே வருத்தமாக இருந்தது. இதற்கு முன்னர் எப்போதும் இதுபோல் நடந்ததில்லை. முழு போதையில் கூட இப்படி நினைவிழந்ததில்லை. ஆனாலும் இந்த வருடம் முழுவதுமே இப்படித்தான் இருக்கிறது எனக்கு. மனதுக்கு ஒவ்வாத காரியங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. போகிற போக்கைப் பார்த்தால் இந்த நல்ல நேரம், கெட்ட நேரத்திலெல்லாம் பெரிதாய் நம்பிக்கை வந்துவிடும் போலிருக்கிறது. சாமியே சரணம் அய்யப்பா என்று சரணடைந்துவிடலாம் போல் கூட தோன்றியது. இல்லையென்றால் இன்டர்னெட் சென்டருக்கு வந்திருப்பேனா? முதல் நாள் தான் உத்மானியாவில் எனது இன்டர்னெட் மோடத்தை தொலைத்திருந்தேன். சிக்னலுக்காக எக்ஸ்டன்ஷன் கேபிளில் இணைத்து ஜன்னல் வழியாக அறைக்கு வெளியில் விட்டிருந்த மோடத்தினை எவரோ ஒரு நல் மனம் கொண்டவர் லாவிக்கொண்டு போய்விட்டார். அந்த மனிதரின் நல்லெண்ணமே இப்படி தமாம் வைரஸ் சென்டர் வரை அழைத்து வந்து மயக்கமடைய வைத்திருக்கிறது. பிலிப்பைனிகள் மேல் தான் எல்லோரும் சந்தேகம் அடைகின்றனர். இதுபோன்ற தீரச்செயல்களில் அவர்கள் தான் தேர்ந்தவர்களாம். எனக்கு எவரையும் சந்தேகப்பட முடியவில்லை. போய்விட்டது அவ்வளவுதான். இதுவும் ஒரு பாடம். பா.ராவிடம் சொன்னபோது 'ஏன்யா இப்படி அடி மேல அடியா விழுந்துக்கிட்டிருக்கு' என்றார். 'நானும் இந்த வருஷம் பூரா பார்த்துக்கிட்டிருக்கேன், ஒரு நல்ல செய்தி கூட சொல்ல மாட்டேங்குறானே?' என்று நினைத்திருப்பார். அப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது. என்ன செய்ய?
26 ம் தேதி காலை தான் உத்மானியாவிலிருந்து கோபர் கிளம்பி வந்தோம். கம்ப்ளீட்டாக ப்ராஜெக்ட் முடிவுக்கு வந்து மொத்தமாக கிளம்பி வந்தோம். இனி வேறு புதிய ப்ராஜெக்ட், வேறு புதிய மனிதர்கள், புதிய இடம் என்று பார்க்கவேண்டும். ஆனால் எப்போது என்றுதான் தெரியவில்லை. அதுவரை தலைமை அலுவலகத்தில் தான் பழி கிடக்கவேண்டும். இங்கு காத்திருப்பதைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இருக்கும் இம்சைகளிலேயே பெரிய இம்சை இங்கு காத்திருப்பதுதான்.
2011 ஆரம்பமெல்லாம் அமர்க்களமாகவே இருந்தது. தமிழ்மணம் நடத்திய சிறந்த இடுகைகளுக்கான போட்டியில் படைப்பிலக்கியம், புத்தக விமர்சனம் என்று இரு பிரிவிலும் முதல் பரிசு கிடைத்தது மிக மகிழ்வான ஒன்று. நிறைய புதிய நண்பர்கள் கிடைத்தனர். பழைய நெருக்கமான நண்பர்கள் சிலர் விலகிப்போயினர். நெருங்கிய சில நண்பர்களுடன் தேவையற்ற மனக்கசப்புகள் ஏற்பட்டு விலகும்படி நேர்ந்தது. ஒரு நண்பருக்குக் கொடுத்திருந்த கமிட்மென்டிலிருந்து தவறினேன். நிறைய திட்டமிடல்கள், தொடர்ச்சியான தோல்விகள் என்று வறட்சியாகவே சென்றது வருடம். கிட்டத்தட்ட 5 மாதங்களாக வேலையின்றி இருக்கிறேன். புதிய வேலைக்காக மாதக்கணக்கில் காத்திருக்கிறோம். நல்ல ப்ராஜெக்ட் கிடைத்து பிரச்சனைகள் எல்லாவற்றிலிருந்தும் வெளியேறி கொஞ்சம் நிம்மதியாக இருக்கும் நாளை எதிர்நோக்கியிருக்கிறேன்.
சினிமாவைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட 500 படங்களாவது பார்த்திருப்பேன். எனக்கு சினிமாவில் மொழி பேதமெல்லாம் கிடையாது. எல்லா மொழிப் படங்களையும் பார்த்துவிடுவேன். இந்த வருடம் நிறைய நல்ல சினிமாக்கள் பார்த்தேன். எழுதத்தான் இயலவில்லை. மலையாளத்தில் சிட்டி ஆஃப் காட், சால்ட் அன்ட் பெப்பர், சாப்ப குருஷி, ஆதாமின்டே மகன் அபு, ரீது என்று நல்ல சினிமாக்கள் வந்தன. தமிழில் எனக்கு ஆடுகளமும், வாகை சூட வா வும் மிகப் பிடித்திருந்தன. வருட இறுதியில் வந்த சாந்தக்குமாரின் 'மௌனகுரு' மிகத் தரமான படம். ரொம்பவே பிடித்திருந்தது. க்ளைமாக்ஸ் தான் கொஞ்சம் அசுவாரஸ்யம். ஆங்கிலத்தில் மிட்னைட் இன் பாரிஸ் என்ற ஃபேன்டஸி படத்தை ரசித்து ரசித்துப் பார்த்தேன். நான்கைந்து தடவையாவது பார்த்திருப்பேன். அது இலக்கியம் சார்ந்த ஒரு கனவுப் பயணம். நேற்றைக்குள் நுழைந்து மனதிற்கு விருப்பமான படைப்பாளிகளுடன் உரையாடும் ஒரு அழகிய கனவு. அவ்வளவு பிடித்திருந்தது.
அதே போல் கைவசம் இருந்த நூல்கள் மொத்தத்தையும் வாசித்து முடித்தேன். இனி புதிதாக ஆர்டர் தான் செய்யவேண்டும். 2012 ஜனவரி புத்தக சந்தையை ஒட்டி ஒரு பெரிய பட்டியலே வைத்திருக்கிறேன். ஒவ்வொன்றாக வாங்க முயலவேண்டும்.
***
எழுத்தாளர் ஜெயமோகன் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக பூமணிக்கு விருது அளிக்கும் செய்தியைப் பகிர்ந்தபின் கோவில்பட்டி சென்று பூமணியை நேரில் சந்தித்து ஒரு விரிவான நேர்காணல் நடத்தி அதையொட்டி தனது தளத்தில் பூமணி குறித்தான பார்வையை தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருந்த நாட்களில் அம்பாரம் தொகுப்பை மீண்டுமொருமுறை வாசிக்கவேண்டும் என்று தோன்றியது. இந்த மாத துவக்கத்தில் இருந்தே அம்பாரத்தில் தான் மூழ்கியிருந்தேன். கி.ரா, பூமணி, தனுஷ்கோடி ராமசாமி, லட்சுமணப்பெருமாள், மேலாண்மை பொன்னுச்சாமி என்று நீளும் கரிசல் எழுத்தாளர் வரிசையின் படைப்புகள் என்றும் என் மனதிற்கு மிக நெருக்கமான ஒன்று. என் சொந்த மண்ணின் வாசனையை இவர்களின் எழுத்தில் நுகர்ந்துகொண்டே இருக்கிறேன். எத்தனையோ ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இங்கே இந்தப் பாலையில் தனித்திருக்கும் இந்த நேரத்திலும் என் ஊர்வாசத்தை இவர்களின் எழுத்துக்களில் உணர்ந்தபடியே இருக்கிறேன்.
சரி இப்போது எதற்கு இதை சொல்கிறேன் என்கிறீர்களா? பூமணி அவர்களின் படைப்புகள் பற்றி, குறிப்பாக அம்பாரம் குறித்து விரிவாக எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இப்போதிருக்கும் இந்த கடினமான சூழலில் எழுத இயலாமல் போய்விட்டது. சொல்வனத்தில் திரு.மித்திலனின் விமர்சனத்தைப் பார்த்ததும் அடடா நாமும் எழுதியிருக்கலாமே என்று தோன்றியது. இப்போதைக்கு இல்லையென்றாலும் ஒருநாள் நிச்சயம் எழுதவே செய்வேன்.
இந்த ஆண்டிற்கான விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் விருதைப் பெற்ற திரு.பூமணி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைப் பதிவு செய்யும் இத்தருணத்தில் தமிழின் மூத்த படைப்பாளுமையான அவரை வணங்குகிறேன். விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட அன்பர்களுக்கும் திரு ஜெயமோகன் அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.
***
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இன்று மாலை என் இனிய அழகேஷ்க்கு போன் செய்தேன். 'ஹலோ' என்று என் குரல் கேட்ட நிமிடத்தில் 'என்ன சரவணா, எவ்வளவு நாளாச்சு ஏன்டா பேசல, ஏதாவது பிரச்சனையா?' என்று அன்பில் குழைந்த அதே குரல். மனதிற்கு நிறைவான சினேகத்தின் குரல். கசப்புகளையெல்லாம் மறந்து சற்று நேரம் சந்தோஷமாகப் பேசினேன். இன்று அழகேஷின் குழந்தை 'கௌசெல்'லுக்கு பிறந்த நாள். 'இன்னிக்கு நீ பேசுனது ரொம்ப சந்தோஷமா இருந்தது சரா' என்றார். எனக்கும் தான். குழந்தைக்கு என் அன்பு அழகேஷ்.
***
தொடர்ச்சியான கசப்புக்களினால் இணையம் பக்கம் எப்போதாவது எட்டிப் பார்ப்பதோடு சரி. முன்பு போல் தொடர்ச்சியாக எழுதுவது விட்டுப்போய்விட்டது. எழுத நினைத்திருந்த விஷயங்கள் எதையும் எழுத முடியவில்லை. சும்மா சும்மா புலம்பிக்கொண்டே வருடத்தைக் கடத்திவிட்டேன். இனி இணையத்திற்கு ஒரு சிறிய இடைவேளை விடலாம் என்று நினைக்கிறேன். உடல், மனம் எல்லாம் சரியான பின் இந்தப் பக்கம் வருகிறேன். ப்ளாக், ஃபேஸ்புக், ப்ளஸ் என்று எல்லாவற்றிலிருந்தும் விலகியிருக்கப் போகிறேன். அட்லீஸ்ட் ஒரு இரண்டு மாதத்திற்காவது இந்தப் பக்கம் வரப்போவதில்லை. இணையமில்லாப் பெருவாழ்வு எப்பிடியிருக்கிறதென்று பார்க்கலாம். அனேகமாக ஊருக்குச் செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கிறேன். இன்னும் முடிவாகவில்லை. புத்தாண்டிற்கென்று எந்த சபதமும் இல்லை. ஆனால் 2012 நல்லதொரு வருடமாக அமையும் என்று வழக்கம் போல நம்புகிறேன். பார்க்கலாம்.
வழக்கம்போல இல்லாமல் படு மட்டமாக ஒரு ஆண்டு கடந்துபோயிருக்கிறது எனக்கு. லெக் தாதா போல கால் வைத்த இடமெல்லாம் பஸ்பமாகிப் போனது. எவரையேனும் எனது பேச்சினால், நடத்தையினால் காயப்படுத்தியிருந்தால் மன்னித்துவிடுங்கள் நண்பர்களே. நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
இனி இணையமில்லா பெருவாழ்வு.
7 கருத்துரைகள்:
எல்லாம் இந்த வருஷம் சரியாயிரும் எதையும் போட்டு மனசுல உழப்பிக்காம இருங்க.. சென்னையில் சந்திப்போம்.
சரவணா...இந்த ஆண்டு எல்லாக்கஷ்டங்களூம் மறைந்து ..மகிழ்ச்சி பொங்கட்டும்..
இதுவும் கடந்து போகுமென்ற பழமொழி உண்டு..
இந்த ஆண்டு இனியதாய் அமைய வாழ்த்துக்கள்.
//இனி இணையமில்லா பெருவாழ்வு//
அப்படினா??
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சரவணக்குமார். விரைவில் மீண்டு(ம்) வாருங்கள்.
@ கேபிள்ஜி
@ மணிஜி அண்ணா
மிக்க நன்றி.
@ இந்திரா
நன்றிங்க.
@ வித்யா
மிக்க நன்றிங்க.
நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள்.
அருமை நண்பா,
இனிய புத்தாண்டாக அமையட்டும்.
சனி விலகி நன்மனையே நடக்கும்,சாமியே சரணம் ஐயப்பா என்று பிடித்துக்கொள்ளுங்கள், தவறேதுமில்லை.உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்,30வயதுக்கு மேல் ஆனால் இது போல பிரச்சனைகள் வருவது இயற்கை,உடல் மனம் ஆரோக்கியமாக திகழுங்கள்,நிறைய படங்கள்பார்த்தேன்,எழுத நேரமில்லை,திரைப்பட விழாவில் 6 படங்கள் பார்த்தேன்,இசைஞானியின் இசைவிருந்துக்கு சென்றது இனிய நிகழ்வு நண்பா.சேட் செய்ய கூட நேரமில்லை,கோபிக்க வேண்டாம்.
எல்லாம் நலமாகும். கவலை வேண்டாம்.
//இப்படி ஒரு பொது இடத்தில் இப்படி நினைவு தப்பி விழுந்தது ரொம்பவே வருத்தமாக இருந்தது//
கெட்டதிலும் நல்லது; ரூமில் தனியே இருக்கும்போது நட்ந்திருந்தால் கவனத்திருக்கவும் ஆளில்லாமல் போயிருக்கலாம்.
//இணையத்திற்கு ஒரு சிறிய இடைவேளை//
அமைதி கிட்டுமெனில் செய்யுங்கள்.
புத்தாண்டு வாழ்த்துகள்.
கருத்துரையிடுக