இந்தப் பக்கங்களில் எழுதி மூன்று மாதமாகிறது. எப்போதுமில்லாதபடி ஒரு பெரிய இடைவெளி விழுந்துவிட்டது. ஆனாலும் இது தேவையான இடைவெளியே. இடைப்பட்ட இந்த மூன்று மாத காலத்தில் நின்று நிதானமாக ஒரு சுயபரிசோதனை செய்துகொள்ள முடிந்தது. எவ்வளவு பெரிய காயத்திற்கும் காலமே பெரிய மருந்து என்று சொல்வார்கள். என்னளவில் அது உண்மையே. அனுபவங்கள் கற்றுக்கொடுக்கும் வாழ்க்கை மகத்தானது. காலம் நிறைய கற்றுக்கொடுத்திருக்கிறது. கவனிப்பின்றி தவறவிட்ட அருமையான பல தருணங்களை இந்த மூன்று மாத காலத்தில் உணர்ந்தேன். எப்போதும் துணையிருக்கும் புத்தகங்களும் தொடர்ச்சியான வாசிப்பும் மட்டுமே என்னை நான் இழந்துவிடாமலிருக்க உதவின. வலைப்பதிவில் எதுவும் எழுதவில்லையென்றாலும் வேறொரு முயற்சிக்காக நான் எழுதிக்கொண்டுதான் இருந்தேன்.
நண்பர் நேசமித்ரனுடனான தொடர்ச்சியான உரையாடல்களும் அவர் கொடுத்த ஊக்கமும் எனக்கு மிக முக்கியமானதாகும். விரைவிலேயே சில நல்ல விஷயங்கள் நடக்கலாம் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.
*****
இடைவிடாத பணி நெருக்கடிகளுக்கு மத்தியில் நண்பர்களுடனான சந்திப்பும், உற்சாகமான உரையாடலும் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஊரிலிருக்கும்போது சதா சர்வ காலமும் இதே வேலையாகத்தான் இருப்பேன். இப்போது இணையத்திலும் ஊரிலிருப்பதைப் போன்றே நல்ல நண்பர்கள் உண்டு. குறிப்பாக ராஜேஷ், கீதப்ப்ரியன், ஹாலிவுட் பாலா, கொழந்த, க.ராமசாமி, முரளிகிருஷ்ணன், போன்றவர்களுடனான கூகுள் + ஹேங்க் அவுட் அரட்டைகள் உற்சாகமானது. வாரா வாரம் இல்லாது போனாலும் மாதத்தில் ஏதாவது ஒரு சனிக்கிழமையை தேர்வு செய்து பேசிக்கொள்வோம். வீட்டுத் திண்ணையில் அமர்ந்து அரட்டையடிப்பதைப் போன்ற சந்தோஷம் அது. நண்பர்கள் தங்கள் பிஸியான ஷெட்யூலில் நேரம் ஒதுக்கி சந்திப்பிற்கு வருவது பெரிய விஷயம். நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். ’அடுத்த ஹேங்க் அவுட் எப்பன்னு சொல்லுங்க சாமிகளா?’
*****
ப்ளாக்கர் பக்கம் வராத இந்த இடைப்பட்ட நாட்களில் கிடைக்கும் ஓய்வு நேரங்களிலெல்லாம் கூகுள் பஸ்ஸில் சென்று ஏறிக்கொண்டேன். கொஞ்சம் வசதியான பயணம் அது. கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், நல்ல படைப்புகளை மேற்கோள் காட்டிப் பேசுவதற்கும் மிகச் சிறந்த இடம் பஸ். நானெல்லாம் அதில் கத்துக்குட்டிதான். பஸ் தொடங்கிய நாளிலிருந்தே அதில் பயணித்து வரும் நண்பர்கள் அதிகம். முன்பு ப்ளாக்கில் பிரபலமாக எழுதிக்கொண்டிருந்த பலரும் பஸ்களில் தான் இப்போது உலா வருகின்றனர். கூகுள் இப்போது இந்த பஸ் சேவையை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. நெடுநாள் பஸ்ஸர்கள் அனைவருக்கும் இதில் சற்று வருத்தமே. அடுத்ததாக கூகுள் + க்கு செல்லலாமா அல்லது மறுபடியும் ப்ளாக்கிற்கே திரும்பிவிடலாமா என்று தீவிரமாக விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. கூகுள் பஸ் மிகச்சிறந்த சேவைதான். இப்போது அது நிறுத்தப்படுவதில் வருத்தம் இருந்தாலும் சிறப்பாக எழுதக்கூடிய பல நண்பர்கள் திரும்பவும் வலைப்பதிவில் எழுத வருவது மகிழ்ச்சியே. என்னைப் பொறுத்தவரை வலைப்பதிவே நிரந்தரமான ஒன்று. ஏதோ தோன்றுவதை கிறுக்கிக்கொண்டிருக்கலாம். இனி தீவிரமாகவே கிறுக்கவேண்டும் என்று நினைத்துள்ளேன்.
*****
வாகை சூட வா திரைப்படம் பார்த்தேன். ஒரே வார்த்தையில் சொல்வதானால் அற்புதம் எனலாம். முற்றிலும் வணிகமயமாகிவிட்ட இன்றைய திரைச்சூழலில் இது போன்ற ஒரு திரைப்பதிவு தனித்த கவனம் பெறுகிறது. எத்தனை விஷயங்களை நாம் இழந்திருக்கிறோம் என்பதைப் பொட்டிலடித்தாற்போல் சொல்கிறது. நம் பழைய வாழ்க்கையை, முந்தைய தலைமுறையின் வலியை, அறியாமையினால் அவர்கள் இழந்தவற்றை ஆராவாரமில்லாமல் அமைதியாக நமக்குச் சொல்கிறது வாகை சூட வா. மேலை நாட்டு ஆக்கங்களிலிருந்து கூசாமல் காப்பியடித்து தமிழ் படைப்புகள் என்ற பெயரில் வெளிவந்துகொண்டிருக்கும் காப்பிக் கலாச்சாரத்தில் வாகை சூட வா போன்ற படங்களை நாம் நிச்சயம் கொண்டாடவே வேண்டும். இயக்குனர் சற்குணம் களவாணியிலேயே நம் மனதைத் திருடியவர். இதில் பல படிகள் முன்னேறிச்சென்று அசலான தமிழ் வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கிறார். சற்குணத்திற்கு வாழ்த்துகளும் நன்றியும்.
குறிப்பிடத்தகுந்த மற்றொரு திரைப்படம் சரவணனின் ‘எங்கேயும் எப்போதும்’. விபத்தினால் உண்டாகும் வலியைப் பேசும் சினிமா. தமிழில் முதல் முறையாக விபத்தைப்பற்றித் தீவிரமாகப் பேசும் சினிமா வந்திருக்கிறது. விபத்திற்குப் பிந்தைய நாட்களின் வலி, விபத்தைவிடக் கொடுமையானது. அனுபவப்பூர்வமாகவே இதை நன்கறிவேன்.
இந்த இரண்டு படங்களிலுமே சில பல முக்கியமான குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதனாலெல்லாம் இவை நல்ல படைப்புகளல்ல என்று ஒருபோதும் சொல்லிவிடமுடியாது. இரண்டுமே ஒவ்வொரு வகையில் மிக மிக முக்கியமான ஆக்கங்கள். இந்தப் படங்களைப்பற்றி தனியாக விரிவாக எழுத உத்தேசம்.
*****
2010 ம் ஆண்டிற்கான தமிழ்மணம் விருதுகளில் படைப்பிலக்கியம் பிரிவிலும், புத்தக விமர்சனம் பிரிவிலுமாக இரண்டு முதல் பரிசுகள் எனக்குக் கிடைத்தன. பரிசுக்கூப்பனையும் தமிழ்மணம் எனக்கு அனுப்பியிருந்தது. இருப்பினும் சவுதியில் இருந்தபடி அந்தக் கூப்பன்களைக்கொண்டு பரிசாக அறிவிக்கப்பட்டிருந்த புத்தகங்களைப் பெறுவது அத்தனை சுலபமாக இல்லை. நண்பர்களிடம் சொல்லியிருந்தேன். இடையில் இருந்த வேலைத் தடங்கல்களும் இவற்றில் தீவிரமாக இருக்கமுடியாமல் செய்துவிட்டன. கூப்பன் கிடைக்கப்பெற்று கிட்டத்தட்ட ஓராண்டாகப் போகிறது. இனியாவது அதைப் பெற்றுவிடவேண்டும் என்று நண்பர்கள் மூலமாக முயற்சி செய்துகொண்டு இருக்கிறேன். இது சம்மந்தமாக தமிழ்மணத்திற்கு மின்னஞ்சல் அனுப்பலாம் என்று நினைத்திருந்தேன்.
இதற்காகவே நீண்ட இடைவெளிக்குப் பின்னால் தமிழ்மணம் பக்கம் வந்தால் அங்கே பெரும் சர்ச்சை நடந்துகொண்டிருக்கிறது. தமிழ்மணம் நிர்வாகிகளில் ஒருவர் ஒரு குறிப்பிட்ட பதிவில் இட்ட ஒரு மோசமான பின்னூட்டம் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது. இது போன்ற மத நம்பிக்கைகளை கேலி செய்வதும் குறிப்பிட்ட சமூக மக்களின் நம்பிக்கைகளை விமர்சிப்பதும் கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்மணம் நிர்வாகிகளில் ஒருவரே இப்படிச் செய்திருப்பது வருத்தத்திற்குரியது. திரட்டிகளில் தமிழ்மணம் முதன்மையானது. சேவை நோக்குடன் துவங்கப்பட்டு இன்றுவரை சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருப்பது என்பதிலெல்லாம் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இந்த விஷயத்தில் தமிழ்மணம் நிர்வாகியின் செயல்பாடு அத்தனை நாகரிகமாக இல்லை என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.
இந்தக் களேபரங்களுக்கிடையே எப்படி மெயில் அனுப்ப? பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என விட்டுவிட்டேன்.
*****
2007 ம் ஆண்டு அக்டோபர் 18 ம் தேதியன்று நள்ளிரவில் முதல்முறையாக சவுதி வந்திறங்கியது இதோ இப்போது நடந்தது போலவே இருக்கிறது. இன்றோடு சரியாக நான்காண்டுகள் நிறைவடைந்துவிட்டன. வாழ்க்கை என்னவோ வழக்கம்போல எந்த முன்னேற்றமுமின்றித்தான் இருக்கிறது. நாட்களோ சடுதியில் ஓடி மறைந்துவிட்டன. இந்தப் பாலைச் சூட்டில் எத்தனை எத்தனை அனுபவங்கள். முன்னரே சொன்னதுபோல அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ளும் வாழ்க்கைதான் அர்த்தமுள்ளதாக இருக்கிறது. இப்போது கூட தொடங்கிய இடத்திலேயேதான் நின்றுகொண்டிருக்கிறேன். முன்னேறிச்செல்லும் முனைப்பு மட்டும் அப்படியேதான் இருக்கிறது. செல்வேன்.
24 கருத்துரைகள்:
அவ்வப்போதாவது எழுதுங்க சரவணா. வாகை சூட வா பார்த்து எனக்கும் தோன்றிய ஒரே வார்த்தை அற்புதம் தான்.
நண்பா,
நலமா?
நீண்ட நாளாக இடைவெளி விட்டு எழுதினாலும் நல்ல பகிர்வு,ஆதாமிண்ட மகன் அபு என்னும் அற்புதமான படம் ,பார்த்தேன்.நீங்கள் நிச்சயம் பார்த்திருப்பீர்கள்,கதாமி என்னும் சவுதி சம்மந்தப்பட்ட படமும் பார்க்க வைத்திருக்கிறேன்.
ஆகா...சிங்கம் குட்டி போட்டு விட்டது.
// என்னைப் பொறுத்தவரை வலைப்பதிவே நிரந்தரமான ஒன்று. ஏதோ தோன்றுவதை கிறுக்கிக்கொண்டிருக்கலாம். இனி தீவிரமாகவே கிறுக்கவேண்டும் என்று நினைத்துள்ளேன் //
??????????????????????????
Hangoutக்கு உங்கள கூப்புடனும்னா.........எந்தவொரு பிரபல பதிவரையும் திட்ட மாட்டேன்னு சத்தியம் செஞ்சா தான் ஆச்சு...........
வந்தோம்ல வந்தோம்ல . . மீ த ஃபர்ஸ்ட் . . ஹீ ஹீ :)
அடுத்த ஹாங் அவுட், வர்ற வாரம் வெச்சிக்கலாமா இல்ல இந்த வாரம் வெள்ளி நைட்டு வெச்சிக்கலாமா? முடிவு பண்ணுங்க.
அப்ப மீ த பர்ஸ்ட் நான் இல்லையா ?:-(
வாங்க சரவணன்...
நீண்ட நாட்களுக்குப் பிறகு மனதில் உள்ளதை உங்கள் நடையில் எழுதியிருக்கீங்க...
முன்னேற்றம் காணும் நாள் விரைவில் வரும்... நம்பிக்கையுடன் வாழ்வோம்.
@ மோகன்குமார்
நன்றி நண்பரே.
@ கீதப்ப்ரியன்
நண்பா நலமா?. ஆதாமிண்ட மகன் அபு முன்பே பார்த்துவிட்டேன். மிக நல்ல படைப்பு. சவுதி பின்னனியில் உருவாக்கப்பட்ட கத்தாமா வும் பார்த்துவிட்டேன். கத்தாமா சொல்லிக்கொள்ளும்படி இல்லையென்றாலும் முக்கியமான ஆக்கமே. இன்னும் நன்றாக செய்திருக்கலாமே என்று தான் தோன்றியது.
மற்றபடி தொலைபேசியில் கூட உங்களைப் பிடிக்க முடியவில்லையே. அவ்வளவு பிஸியா? ஹாங் அவுட்டிற்கும் வருவதில்லை. நண்பா இந்த வெள்ளி பேசலாமா?
அவ்வப்போது எழுதினாலும், சுவாரஸ்யம் கொஞ்சமும் குன்றவில்லை. பேக்ரவுண்டில் நடந்துகொண்டிருக்கும் பிராஜக்ட் நல்லபடி நடக்க வாழ்த்துகள்.
@ உலக சினிமா ரசிகன்
ஏங்க.. ஏன்?:))))))))
@ கொழந்த
எதுக்கு இம்புட்டு கொஸ்டீன் மார்க்கு:)) வர்றேன்னு சொன்னது ஒரு குத்தமாய்யா?
//Hangoutக்கு உங்கள கூப்புடனும்னா.........எந்தவொரு பிரபல பதிவரையும் திட்ட மாட்டேன்னு சத்தியம் செஞ்சா தான் ஆச்சு...........// யாரு?.. நானு?.. யேய்.. யேய்.. வேணாம்.. போதும்.. நல்லா கெளப்புறாங்கய்யா பீதிய?
@ ராஜேஷ்
நன்றி நண்பா. வெள்ளி இரவு எனக்கு டவுள் ஓகே. கன்ஃபார்ம் ஆனதும் நமக்கு ஒரு மெயில் தட்டி விடுங்க.
@ நன்றி சே.குமார்.
@ நன்றி ஹுஸைனம்மா.
நீண்ட நாட்களுக்கு பின்னர் இங்கே உங்களை காண்பது மகிழ்ச்சியாக உள்ளது. மீண்டும் பயணிப்போம். அடிக்கடி எழுதுங்க சரவணா.
நீண்ட இடைவெலி இருப்பினும் தரமான பகிர்வு.
வணக்கம் ...வருக .
நலமா சரவணன்?
வாங்க சரவணன்.
பதிவுக்காக ’கீ போர்டை’ தொட்டு ரொம்ப நாளாச்சு போல!
”வாழ்க்கை தொடங்கிய நிலையிலேயே இருப்பதாய்” (தொடங்கிய இடத்தில் நின்றுக் கொண்டிருப்பது ) சொல்லியிருப்பது சற்றும் உண்மையில்லை.
’இடைப்பட்ட நாட்களில்’ நீங்கள் சம்பாதித்திருக்கும் நட்புக்களை கணக்கில் கொள்ளாமல் எழுதியிருக்கும் வரிகள் அவை என நம்புகிறேன்.
யார் கண்டது, இதோ இந்த நொடியிலிருந்து கூட உங்கள் வாழ்வு அதிவேகத்தில் பயணிக்கத் தொடங்கலாம். தயார் நிலையில் இருப்பது உங்கள் கடமை.
உங்களின் ”எண்ணங்கள்” ஈடேற வாழ்த்துக்கள்.
நண்பர்களே,நலமா?
ஆபீஸில்,டங்கு வார் தேய வேலை செய்யவேண்டியுள்ளது,சென்னையில் பொதுவாகவே இப்படித்தானா?அல்லது நமக்கு தான் இப்படியான்னு தெரியலை,சேட்டிங் செய்ய கூட தெம்பு இல்ல,ஆனால் நான் ஹாங் அவுட்டிற்கு வருவேன்,நண்பர்கள் அனைவரையும் பார்க்கிறேன்.இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
அடிக்கடி எழுதுங்கண்ணே :))))
So nice. Thanks.
@ ஸ்டார்ஜன்
நன்றி சேக்.
@ நன்றி ஸாதிகா அக்கா.
@ பத்மா
வணக்கம் மேடம். நல்லாருக்கேன். நீங்க நலமா?
@ சத்ரியன்
நன்றி நண்பா.
@ கீதப்ப்ரியன்
வாங்க நண்பா. அப்ப சரி ஹாங் அவுட்ல பார்க்கலாம். இனிய தீபாவளி வாழ்த்துகள்.
@ ராமசாமி
சரிங்க நண்பா.
@ ஓலை
நன்றிங்க.
நீண்ட நாட்கள் கழித்துப் பார்ப்பது மகி்ழ்ச்சி.
அடிக்கடி பதிவிடுங்கள் சரவணா.
சரவணன்ணே, பஸ் வந்தபின் நான் எழுதுவதை முற்றிலும் நிறுத்திவிட்டேன். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அறியப்பட்ட பதிவர்களாக இருந்த அத்தனை பேரும் பிளாகைவிடுத்து பஸ்சில்தான் இருக்கிறோம். கிட்டத்தட்ட 800 ஃபாலோயர்களோடு இருக்கும் எனக்கு பஸ் நிறுத்தப்படுவது பெரும் இழப்புதான். என்னைப் பொறுத்த அளவில் மீண்டும் பிளாக்கை தூசிதட்டி இங்குட்டே வந்திடுவேன். நோ கூகுள்+.
@ நன்றி அக்பர்.
@ அப்துண்ணே..
பஸ் மூடப்போறது வருத்தம்தான். இருந்தாலும் நீங்க திரும்பவும் ப்ளாக் பக்கம் வரப்போறேன்னு சொல்றது ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணே. கூகுள்+ ல எனக்கும் விருப்பமில்ல. ஒன்லி ஹாங் அவுட் மட்டும்னு நினைச்சிட்டு இருக்கேன். பார்க்கலாம்.
கருத்துரைக்கு நன்றி அப்துண்ணே.
பகிர்வுக்கு நன்றி.
வாகை சூடவா பார்க்க வேண்டும் என நினைத்த படம் பார்க்கின்றேன்.
கருத்துரையிடுக