அக்டோபர் 20 ம் தேதி வியாழன் முதல் சவுதியில் தமிழ்மணம் தளம் தடை செய்யப்பட்டுள்ளது. உண்மையில் மிகவும் வருத்தமான செய்தி இது. ஒரு தவறான பின்னூட்டத்தின் விளைவு இந்த அளவிற்குப் போகும் என்று எதிர்பார்க்கவேயில்லை. என்ன மாதிரியான மனிதர்கள். வேலைமெனக்கெட்டு மெயில் அனுப்பி இதைத் தடை செய்தது என்ன மாதிரியான மனநிலை என்று எனக்குத் தெரியவில்லை. மேலும் சவுதியில் இணையத் தடை என்பது அத்தனை கஷ்டமானதும் இல்லை. ஜஸ்ட் லைக் தட் ஒரு மெயில் தட்டிவிட்டால் போதும். மார்க்கத்துக்கு எதிரான கருத்துக்கள் இதில் இடம்பெறுகின்றன என்ற ஒரு வரி எழுதிப்போட்டால் போதும். கேள்வியே கேட்காமால் அந்தத் தளத்தை உடனடியாகத் தடை செய்துவிடுவார்கள். தமிழ்மணத்திற்கு இப்போது அதுதான் நடந்திருக்கிறது. இதை யார் செய்திருந்தாலும் அவர்களுக்கு எனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்கிறேன்.
பெயரிலி எனும் பெயரில் தமிழ்மண நிர்வாகி ஒருவர் நக்கலாக அப்படி ஒரு கமெண்ட் போட்டது தவறான செயல் தான். அதற்குத்தான் எல்லோரும் கடுமையாக கண்டனம் தெரிவித்தாகிவிட்டதே. தமிழ்மணமும் எதிர்காலத்தில் இதுபோல் நடக்காமல் பார்த்துக்கொள்வதாக சொல்லியாகிவிட்டது. அதற்கு மேலும் இந்த அளவிற்குப் போகவேண்டுமா நண்பர்களே? இதனால் தமிழ்மணத்திற்கு எந்த நஷ்டமும் இல்லை. இழப்பு நமக்கே.
நான் பதிவெழுத வருவதற்கு முன்பிருந்தே தமிழ்மணத்தை நன்கறிவேன். சவுதி வந்த புதிதில் தமிழ்மணம் மூலமே ப்ளாக் பற்றி அறிந்துகொண்டேன். அதெல்லாம் ஒரு காலம். எத்தனை எத்தனை அருமையான பதிவுகள். பத்திரிக்கைகளில் இடம்பெறும் கட்டுரைகளைவிட தரமாக எழுதும் பதிவர்கள் என்று தமிழ்மணம் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருந்தது. லாப நோக்கமின்றி சேவை மனப்பான்மையுடன் இயங்கும் ஒரு நல்ல தளமாகவே இப்போதுவரை தமிழ்மணத்தை பார்க்கிறேன். எல்லா அமைப்புகளிலும் அதைத் திறம்பட நடத்திச்செல்வதில் ஒருசில தடைகள் இருக்கத்தான் செய்யும். தமிழ்மணத்திலும் அவ்வாறே. சில மாதங்களுக்கு முன்பு வரை நான் தினமும் செல்லும் தளம் தமிழ்மணமே. ஆனால் ஒருகட்டத்தில் பயங்கர வெறுப்பு வந்துவிட்டது. தமிழ்மணம் முகப்பு பக்கத்தைப் பார்த்தாலே எரிச்சலுறும் அளவிற்கு மொக்கை கும்மிப் பதிவுகள் இடம்பெற்றிருந்தன. இதனாலேயே, நன்றாக எழுதக்கூடிய பதிவர்களில் பெரும்பாலானோர் இங்கிருந்து சென்று கூகுள் பஸ்ஸில் ஏறிக்கொண்டனர். இங்கு நேரத்தை வீணடிப்பதற்கு பதிலாக கிடைக்கும் ஓய்வு நேரங்களில் ஏதாவது உருப்படியாக வாசிக்கலாம் என்று நானும் சென்றுவிட்டேன். ஆனால் தமிழ்மணம் தனது நட்சத்திர வாரத்தில் தங்கள் நிலைகுறித்து விரிவாக விளக்கியிருந்தது திருப்தியளித்தது. பலரும் குறிப்பிட்டதைத் தொடர்ந்து சில அதிரடியான நல்ல முடிவுகளை எடுத்தது. இதெல்லாம் நல்ல விஷயங்களே.
தமிழ் திரட்டிகளில் தலையாயது தமிழ்மணமே. அதிலுள்ள ஒருசில குறைகளை மட்டும் களைந்தால் இன்னும் சிறப்பாக மிளிரும். சவுதியில் தமிழ்மணம் தடைசெய்யப்பட்டாலும் அது நம் பதிவுகளையெல்லாம் திரட்டிக்கொண்டுதான் இருக்கிறது. இங்கிருக்கும் நண்பர்கள் தமிழ்மண தடையை நீக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். அது சாத்தியமா என்று தெரியவில்லை. ஏனெனில் போதுமான அளவிற்கு அன்ப்ளாக் ரெக்வெஸ்ட் கொடுத்தாயிற்று. இருப்பினும் இது தொடர்பான துறையிலிருந்து எந்த ஒரு மறுமொழியும் இப்போதுவரை இல்லை. அனேகமாக அடுத்த வாரத்திற்குப் பிறகு இது சரியாகும் என்று நண்பர்கள் தெரிவிக்கின்றனர். பார்க்கலாம். எது எப்படியிருப்பினும் தமிழ்மணத்திற்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு.
***
லிபியாவின் முன்னாள் அதிபர் கடாபி லிபியாவின் புரட்சிப்படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளார். கடுமையான ரத்தக் காயங்களுடன் கடாபி உயிருக்கு அஞ்சி அலறும் வீடியோ இணையத்தில் பரபரப்பாக சுற்றிக்கொண்டிருக்கிறது. ரத்தச்சகதியில் கிடத்தப்பட்டிருக்கும் கடாபியின் உயிரற்ற சடலத்தின் அருகில் அமர்ந்து சிரித்து மகிழ்ந்து கொண்டாடியபடி தங்கள் மொபைல் போனில் படம் பிடிக்கும் இளைஞர்களின் உற்சாகமும் அதில் ஒன்று. பார்ப்பதற்கு கஷ்டமாக இருந்தாலும் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக லிபியாவை சர்வாதிகாரத்தின் பிடியில் வைத்திருந்த ஒரு கொடுங்கோலனின் இறுதி முடிவு இது என்ற வகையிலேயே எடுத்துக்கொள்ளமுடியும் இதை. உலக அளவில் சர்வாதிகாரத்தின் வேர்கள் இப்படித்தான் கடைசியில் அறுந்து பிடிமானமற்றுத் தொங்கிவிடுகின்றன. சமகால கொடுங்கோலன் இன்னொருவனும் இருக்கிறான். கடாபியின் இடத்தில் இவனையும் கற்பனை செய்து பார்த்தேன். மகிழ்ச்சியாக இருந்தது.
***
சில நாட்களுக்கு முன்பாக நண்பர் கேபிள் சங்கரின் தளத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தேன். அதில் சைடு பாரில் இணைக்கப்பட்டிருக்கும் தமிழ் டிஜிட்டல் சினிமா இணைப்பை எதேச்சையாக கிளிக் செய்யப்போக எனது லேப்டாப்பில் வைரஸ் தொற்றிக்கொண்டது. எவ்வளவோ முயற்சித்தும் பலன் இல்லை. மொத்த டேட்டாக்களையும் இழந்ததுதான் மிச்சம். எனது சிஸ்டத்தில் ஏதாவது பிரச்சனை என்றால் அக்பர், ஸ்டார்ஜன் போன்ற நண்பர்கள்தான் பார்த்துத்தருவார்கள். அக்பர் அப்போது அருகில் இல்லை. அவருக்கு போன் செய்து பிரச்சனையை சொன்னபோது ’பக்கத்தில் இருக்கும் ஏதாவது சர்வீஸ் செண்டருக்குப் போங்கள்’ என்றார். நான் அதன்படி செய்திருக்கவேண்டும். உடன் வேலை பார்க்கும் மும்பையைச் சேர்ந்த நண்பர் ஒருவரிடம் கொடுத்து சரிசெய்யச் சொன்னேன். அவரும் கர்ம சிரத்தையாக வைரஸ்களை நீக்கிக் கொடுத்துவிட்டார், ஆனால் அவரால் பழைய டேட்டாக்களை மட்டும் திரும்ப எடுக்கமுடியவில்லை. கிட்டத்தட்ட 100 ஜி.பிக்கும் மேலான பொக்கிஷங்கள் போயே போச்சு. ஒருவாரத்திற்குப் பின்னர் அக்பரிடம் எடுத்துவந்து காட்டியபோது ’முதல்லயே கொண்டுவந்திருந்தா முடிஞ்ச அளவு டேட்டாஸ் ரெக்கவர் பண்ணிக்கொடுத்திருப்பேன்’ என்றார். இப்படி சேமித்தவற்றைத் தொலைப்பது இது இரண்டாவது முறை. முன்பொருமுறை எனது கவனக்குறைவினால் கிடைத்தற்கரிய பொக்கிஷங்களை இழந்தேன். இப்போது இது. தேவையில்லாத எந்த இணைப்பையும் கிளிக் செய்து தொலைக்கக்கூடாது என்ற பாடம் தான் இதில் கிடைத்த அனுபவம். இனி இழந்தவற்றையெல்லாம் எப்போது மீட்டெடுக்க?
***
சவுதி அரேபியாவின், பாதுகாப்பு மற்றும் விமானத்துறை அமைச்சரும், மன்னர் அப்துல்லாவிற்கு அடுத்த ஸ்தானத்தில் இருப்பவருமான இளவரசர் சுல்தான் பின் அப்துல் அஜீஸ் புற்று நோய் காரணமாக சில நாட்களுக்கு முன்பாக அமெரிக்காவில் மரணமடைந்தார். சவுதி அரசில் மிக மிக முக்கியமானவர் சுல்தான். சவுதி வரலாற்றில் இவருக்கு தனி இடம் உண்டு. இவரது ஆக்கப்பூர்வமான பல்வேறு பணிகளால் மன்னருக்கு உறுதுணையாக இருந்தார். தீவிரவாதத்திற்கு எதிரான சுல்தானின் நடவடிக்கைகள் உலகளவில் இவர் மீது கவனம்கொள்ளச் செய்தது.
அவரது உடல் நேற்று மாலை தனி விமானத்தில் ரியாத் வந்து சேர்ந்தது. எந்தவிதமான அமளிதுமளிகளும் இல்லை. விடுமுறை கிடையாது. தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு கிடையாது. சமாதி சர்ச்சைகள் கிடையாது. இயல்பு வாழ்க்கை எப்போதும் போலவே இருந்தது. ஒரு சாதாரண சவுதி குடிமகன் மரணமடைந்தால் என்ன மாதிரியான நிலை இருக்குமோ அதேதான் இப்போதும். கடுமையான சட்டதிட்டங்கள் கொண்ட சவுதி அரசின் கொள்கை கோட்பாடுகளில் சிலவற்றை மனம்விட்டுப் பாராட்டத்தோன்றும். இப்போது அப்படித் தோன்றுகிறது. வெல்டன் சவுதி.
***
கூகுள் பஸ் சேவை இன்றோடு நிறுத்தப்படும் என்று தெரிகிறது. நான் கடந்த ஆறு மாத காலமாகத்தான் பஸ்ஸில் இருக்கிறேன். நல்ல பகிர்வுகள், நண்பர் கும்மிகள், சில புதிய தகவல்கள் என்று மிக நல்ல பயணம் இது. நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.
***
2007 ம் ஆண்டு தீபாவளிக்கு பத்து பதினைந்து நாட்களுக்கு முன்பாக சவுதி வந்தேன். இது சவுதியில் எனக்கு ஐந்தாவது தீபாவளி. மூன்று முறை விடுமுறையில் ஊருக்குச் சென்றிருந்தபோதும் ஊரில் தீபாவளி கொண்டாடுவது மட்டும் சில ஆண்டுகளாக இயலாத ஒன்றாகவே இருக்கிறது. எல்லாப் பண்டிகைகளுமே கொண்டாட்டங்கள் என்பதைத்தாண்டி உணர்வுரீதியிலான மன நிம்மதியைத் தருவதாகவே இருக்கின்றன. உறவுகளுடனான ஒட்டுதல், நண்பர்களுடனான நெருக்கம் என்று பண்டிகைகள் வாழ்தலின் ருசியைக் கற்றுத்தருகின்றன.
நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
21 கருத்துரைகள்:
தங்களுடைய தெளிவான கருத்துகளை தெளிவான தமிழில் படித்து மகிழ்ந்தேன். மகிழ்ந்தேன் என்பது வெறும் உபசார வார்த்தை இல்லையென்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.
ஒருவர், அது யாராக இருந்தாலும் சரி, ஒரு தவறு செய்துவிட்டால், குறைந்த பட்சம் "நான் தவறு செய்துவிட்டேன், மன்னிக்கவும்" என்று சொல்வதுதான் பண்பு. அதிலும் ஒரு பிரபல திரட்டியின் நிர்வாக உறுப்பினர் தவறு செய்தால், அதற்கு பரிகாரம் கண்டிப்பாகத் தேடவேண்டும். அதை விட்டுவிட்டு சப்பைக்கட்டு சமாதானம் சொல்வது குற்றத்தை நீர்த்துப் போகச்செய்வதுதானே தவிர, பரிகாரமாகாது. இது என்னுடைய கருத்து.
மிகவும் வருத்தமான செய்திதான். பலருக்கும் நஷ்டம்தான். ஆனால் தவிர்க்க முடியாதது.
நண்பா,
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்,நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்த நீண்ட பகிர்தலுக்கு நன்றி.
இனிய பகிர்வு. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இதயங்கனிந்த தீபஒளி திருநாள் வாழ்த்துகள். இந்நன்னாளில் சந்தோசமும் மகிழ்ச்சியும் பெருகட்டும்.
// சவுதி அரேபியாவின், பாதுகாப்பு மற்றும் விமானத்துறை அமைச்சரும், மன்னர் அப்துல்லாவிற்கு அடுத்த ஸ்தானத்தில் இருப்பவருமான இளவரசர் சுலைமான் பின் அப்துல் அஜீஸ் //
சுலைமான் அல்ல, சுல்தான் பின் அப்துல் அஜீஸ்.
// அவரது உடல் நேற்று மாலை தனி விமானத்தில் ரியாத் வந்து சேர்ந்தது. இன்று தகனம் நடந்தேறியது //
தகனமல்ல. அடக்கம் செய்யப்பட்டது.
நல்ல பகிர்வு. இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.
@ அப்துல்காதர்
தவறினைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி தல. சுல்தான் தான் டைப்பும் போது சுலைமான் ஆயிட்டாருன்னு நினைக்கிறேன். இப்ப திருத்திட்டேன்.
உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.
தமிழ் மணம் :(
சவுதி விஷயத்தை உண்மையில் பாராட்டனும்.
கேபிளுக்கு தகவல் சொன்னீங்களா?
தீபாவளி வாழ்த்துகள் நண்பா! ;)
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
@ DrPKandaswamyPhD
@ கீதப்ப்ரியன்
@ ஸ்டார்ஜன்
@ ஷங்கர்
@ மாதேவி
அனைவருக்கும் நன்றி. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
நண்பா... வைரஸ் சம்மந்தமா எந்த அட்வைஸும் கொடுக்க விரும்பல. பட், டேட்டா போனது கவலையாத்தான் இருக்கு :-(.
அடிக்கடி இந்தப்பக்கம் வாங்க. மற்றவை hangoutல்.
Nice post saravana! Thanks.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
ஆர்ப்பாட்டமில்லாமல் நடந்த இளவரசரின் நல்லடக்கம்- பாராட்டத்தான் வேண்டும்.
தமிழ்மணப் பிரச்னைகள் சமீபத்தில்தான் அறிந்தேன்.
இந்த வருடமும் தீபாவளி அங்குதானா...பழகி விட்டதா?
கட்டுரையின் முதல்வார்த்தையைப்படிக்குமுன்னே மளமளவென இழுத்துக்கொண்டு கடைசி வரிக்கு கொண்டுபோகும் அழகிய ஈர்ர்ப்புள்ள எழுத்து.
@ ராஜேஷ் - நன்றி நண்பா. hangout க்காக நானும் ஆவலோடு வெய்ட் பண்ணிட்டு இருக்கேன்.
@ சேது - நன்றி
@ நன்றி குமார்
@ ரத்னவேல் ஐயா நன்றி.
@ ஸ்ரீராம்
ஆமாங்க சார். இந்த வருஷ தீபாவளியும் இங்கதான்.
கருத்துரைக்கு நன்றி.
@ காமராஜ் - நன்றி காமு அண்ணா.
தமிழ்மணத்தைப் பற்றி பாரபட்சமில்லாமல் கூறியிருக்கிறீர்கள். உங்கள் நடுநிலைத்தன்மை பிடித்திருக்கிறது. பதிவில் இருக்கும் மற்ற விஷயங்களும் நன்று. வாழ்த்துக்கள்..!!
நான் உங்கள் வலையில் பாலோவராக இணைந்துவிட்டேன். எமது வலைக்கும் வந்து பாருங்கள் பிடித்திருந்தால் இணைந்து கொள்ளுங்கள்.. உங்கள் கருத்துகளையும் மறக்காமல் சொல்லிவிட்டு செல்லுங்கள்..!! நன்றி அன்பானவரே.
எனது வலையில் இன்று:
மாவட்டங்களின் கதைகள் - தருமபுரி மாவட்டம்
தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!
கருத்துரையிடுக