ச.முருகபூபதி நவீன நாடகக்கலையின் மிக முக்கியமான ஆளுமைகளுள் ஒருவர். மிருக விதூஷகம், செம்மூதாய் போன்ற அபாரமான படைப்புகள் மூலம் காத்திரமாக வெளிப்பட்டவர். கடந்த முறை விடுமுறைக்கு சென்றிருந்தபோது வாங்கிய நூல்களில் முருகபூபதியின் செம்மூதாயும் ஒன்று. சில நூல்களை உடனே படிக்கவேண்டும் என்று பரபரப்பாக இருக்கும். சில நூல்களை மெதுவாக வைத்து வைத்துப் படிக்கவேண்டும் என்று நினைப்பேன். செம்மூதாய்க்குள் அத்தனை எளிதில் நுழையமுடியாது என்று ஆரம்ப சில பக்கங்களிலேயே தெரிந்தது. ஆழமான வாசிப்பு தேவைப்படும் நூல் அது. முருகபூபதியின் ஆறு நாடகங்கள் அடங்கிய தொகுப்பு. ஆழி பதிப்பகம் வெளியீடு என்பதாக நினைவு. செம்மூதாய் பற்றியும் நவீன நாடகக்கலை பற்றிய என் பார்வையையும் பின்னர் விரிவாக எழுதுகிறேன். இப்போது முருகபூபதியின் புதிய நாடகமான சூர்அணங்கு பற்றிப் பேசலாம்.
கடந்த 23 ம் தேதி இரவில் நண்பர் கவிஞர் நேசமித்ரன் செல்பேசியில் அழைத்திருந்தார். வரும் ஜூலை மாதம் அரங்கேறப்போகும் முருகபூபதியின் புதிய நாடகமான சூர்அணங்கு பற்றிய ஒரு அறிமுகத்தை அவருக்கேயுரித்தான மொழியில் பேசினார். எனக்கு நேசனுடனான உரையாடல் எப்போதுமே அப்படித்தான் அமையும். நேரடியாக தலைப்புக்கு வந்துவிடுவோம். ஒவ்வொரு முறை பேசும்போதும் ஏதாவது ஒரு முக்கியமான தலைப்பில் ஒரு விவாதம் நடந்தே தீரும். இப்போதும் அப்படித்தான் எடுத்த எடுப்பிலேயே நவீன நாடகக்கலை பற்றிப் பேசத்துவங்கினோம். இதில் எனக்குள்ள அதீத ஆர்வத்தைப் பகிர்ந்துகொண்டபோது முருகபூபதி, கோணங்கி இருவர் பற்றியும் பேசத்துவங்கினோம். நான் கோணங்கியின் மதினிமார்கள் கதையையும் பாழி நாவலையும் ஒப்பிட்டுப் பேச ஆரம்பிக்கும்போது திடீரென்று ‘சரவணன் கோணங்கி பக்கத்துல இருக்கார் பேசுறீங்களா’ என்றார் நேசன். ஆஹா என்று ஆவலோடு காத்திருந்தபோது வணக்கம் நான் கோணங்கி பேசுறேன் என்று ஒரு கம்பீரக்குரல்.
வேனிற்கால இதழாக வெளிவந்திருக்கும் கல்குதிரை இதழ் பற்றிப் பேசத்துவங்கி முருகபூபதியின் சூர்அணங்கில் கொண்டுவந்து நிறுத்தினார். பேசியது குறைவான நிமிடங்களேயெனினும் மனதுக்கு நிறைவான தருணம் அது. எழுத்தின் வழியாக மட்டுமே கண்ட ஒரு அசலான கலைஞனுடனான உரையாடல் தந்த மனநிறைவு அது. நேசனுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். நன்றி சொன்னால் அண்ணன் கோபித்துக்கொள்வார் என்பதால் வணக்கம் மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.
சூர்அணங்கு நாடகத்தில் கடுமையான பஞ்ச காலத்தில் தீராத வறுமையின் கொடுமையினால் தன் ஏழு குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து உயிர்விட்ட நல்லதங்காள் எனும் நாட்டார் கதை நாயகியைக் குறியீடாக வைத்து நாடகத்தின் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. முருகபூபதியே தன் கைப்பட எழுதிய விளக்கக்குறிப்புகள் நாடகத்திற்கான ஒரு சிறு அறிமுகம்போல அமைந்துள்ளது. அதை வாசிக்கும்போதே நாடகம் மீதான எதிர்பார்ப்பும் அதைக்காணும் ஆவலும் அதிகரிக்கிறது.
நாடகம் ஜூலையில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியிலான உதவிக்காக கலைஞர்கள் காத்திருக்கிறார்கள். ஆர்வமுடைய நண்பர்கள் தங்களால் இயன்ற பொருளுதவியை வழங்குமாறு வேண்டுகிறோம். அசலான கலையையும் கலைஞர்களையும் ஆதரிக்க முன்வருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
--------------------------
சூர்அணங்கு நாடகம் பற்றி முருகபூபதி
பஞ்சத்தில் வயல்களிடம் மனிதர்களிடம் மன்றாடித் தோற்றுப்போன நல்லதங்காள் தம் பிள்ளைகள் எழுவருடன் கூந்தக்கிணறு திறந்து எழுந்து வருகிறாள். பறிகொடுத்த நெல்மணிகளை, வரகை, கம்பு செஞ்சோளங்களைத்தேடி பூமியெங்கும் ..ச்சோ…ச்சோவெனக் குத்திவந்த அப்பத்தாமார்களின் கோபமடக்கிய உலக்கைகளை பழம்பெரும் ஆயுதமாய்த் தூக்கித்தருகிறாள்.
சீதனமாய்க்கொடுத்த பனையோலைப் பெட்டிகளும், பஞ்சாரக்கூடைகளும், விரிசொளகுகளும், விளக்கமாறுகளும், ஈய்யப்பாத்திரங்களும், மரக்காவும், பாயும் நாடகநிலத்தில் கலை உயிரிகளாய் பெண்நடிகர்களின் போராயுதமாக உருக்கொண்டு பாடி அழைக்க வருகிறது.
குடும்ப வேலிக்குள் அடுப்பங்கறை சுவர் கீறித்திரியும் பூச்சியினங்களின் மௌனமொழி தெரிந்த பெண்கள் உழைத்துத் தேய்ந்த வடுகரங்களோடு எதிர்பார்ப்பின் உதிர் இலை பிடித்து நாடகவெளியில் மறுஜனனமான நல்லதங்காளின் பாதை தேடி வருகின்றனர்.
ஆண்பெண் உடல்எல்லை தாண்டி தாவரம், பூச்சி என மிருகநிலை கொள்ளும் நாடக புனைவுநிலத்தில் ஸ்திரிநிலை கொண்ட நடிகர்கள் தம் சுவாச மூச்சால் மரித்த வயல் மனிதர்களை வணங்கி வருகிறார்கள். நாவல் உதிரம் ஒழுகிய சொற்களோடு தழும்புகள் ஏறிய உடலுடன் யுத்தத்தில் முட்டி வீழ்ந்த சுடுஈரக்கொம்புகளுடன் நரநரவெனத்திமிறி ஆடி அழைக்கிறாள் சூர் அணங்கு.
2011 ஜுலை மாதம் நடக்கவுள்ள இந்நாடகத்திற்கு தார்மீக உதவி வேண்டி எங்களோடு உங்கள் கரம்கோர்க்க அழைக்கிறோம்.
--------------------------
4 கருத்துரைகள்:
வாசிப்பதை நேசிப்பவர்கள் சேர்ந்து கொண்டால் கேட்கவா வேண்டும்!
நாடகம் மிக சிறப்பாக நடக்க வாழ்த்துகள்.
நேசன் எப்போதும் எதாவாது விவாதிப்பதும் , நம்மை மெருகு படுத்துவதுமான நண்பர்... சரவணன் எப்படி இருக்கிறீங்க... உங்களின் வாசிப்பும் அதன் பகிர்வும் என்னை எப்போதும் ஆச்சரியப்படுத்தும்... வாழ்த்துக்கள்
@ நன்றி அக்பர்.
@ நன்றி மதுரை சரவணன்.
காம தாத்தாவை பற்றி ஒரு கட்டுரை
http://www.vinavu.com/2011/06/24/charu/
காம தாத்தாவை பற்றி ஒரு கட்டுரை
http://www.vinavu.com/2011/06/24/charu/
கருத்துரையிடுக