Friday, May 27, 2011

சில பகிர்வுகள் 27-05-2011

வணக்கம் நண்பர்களே.. நலம்தானே? வலைப்பூ பக்கம் வந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாகிறது. எல்லோருக்குமிருப்பதைப் போலவே கடுமையான பணிச்சுமைகள், இணைய இணைப்பு பிரச்சனைகள், புதிய புதிய அழுத்தங்கள் என்று வறட்சியாகவே கழிந்த கடந்த 35 நாட்களில் நின்று நிதானமாக எதையும் பகிர்ந்திட முடியவில்லை. கிடைத்த சொற்ப ஓய்வு நேரங்களையும் வாசிப்பதிலும் கூகுள் பஸ்ஸிலுமாகக் கழித்தேன். கூகுள் பஸ் உரையாடலுக்கான அற்புதமான வெளியாக இருக்கிறது. எதைப்பற்றி வேண்டுமானாலும் உரையாடலாம், பகிரலாம் எனும் வசதி நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் கூகுள் பஸ் என்பது தீவிரமான விவாத களமெல்லாம் இல்லை. எந்த ஒரு தலைப்பில் பேசினாலும் அதை தீவிரமாக முன்னெடுத்துச் செல்லமுடியாது. பஸ்ஸர்கள் அதை விரும்புவதும் இல்லை. அன்றாட அழுத்தங்களிலிருந்து கொஞ்சம் ரிலாக்ஸ் செய்துகொள்வதற்கே இந்த பஸ் பயன்படுகிறது. நகைச்சுவையாக, நெகிழ்ச்சியாக, ரசனைப் பகிர்வாக, புதிய அறிமுகங்களாக நன்றாகவே இருக்கின்றன உரையாடல்கள். வெட்டி அரட்டைகளும் உண்டு, ஆரோக்யமான விவாதங்களும் உண்டு. இதிலுள்ள மிக முக்கியமான பிரச்சனை நம் நேரத்தை மொத்தமாக இழக்கவேண்டியிருப்பதே. மற்றொன்று தனிமனித தாக்குதல்கள்.

கொள்கை ரீதியாக கோட்பாட்டு ரீதியாக நாமனைவரும் வேறு வேறு கருத்துக்கள் உடையவர்களே. விவாத களத்தில் மாற்றுக்கருத்து கொண்டவர்கள் சில நேரங்களில் கடுமையாகத் தாக்கப்படுகின்றனர். நாகரீகமான வார்த்தைகளில் கோபத்தை வெளிப்படுத்துவதில் நமக்கு பயிற்சி வேண்டும்போல. கடுமையான கோபத்தில் வார்த்தைகள் தடிக்கின்றன. அடுத்தவரைப் பார்த்து வீசும் வசைச்சொல்லின் அடர்த்தி மிக மிக கனமாக இருக்கிறது. தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்திருந்த நாட்களிலும் முடிவுகள் வெளியான பின்னருமாக தி.மு.க உடன்பிறப்புகள் சிலர் பேசிய பேச்சுக்களைப் பார்த்தால் ரொம்பவே வருத்தமாக இருந்தது. பண்பட்ட அரசியல் மேதைகளைப்போல இவர்கள் அடித்த கூத்து சொல்லிமாளாதது.

ஆனால் தேர்தல் முடிவுகளோ யாருமே எதிர்பார்க்காத அளவில் அ.தி.மு.க கூட்டணிக்கு மிகப்பெரும் வெற்றியைக் கொடுத்தது உண்மையில் ஆச்சர்யமே. மக்கள் எப்போதுமே தெளிவானவர்கள் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியிருக்கிறது. தங்களுக்கு மனசாட்சி இருக்கிறது என்பதை உரத்துச் சொல்லியிருக்கின்றனர். கடந்த ஆட்சியின் மீது எத்தனை கோபம் இருந்திருந்தால் அவர்களை இப்படி ஓட ஓட விரட்டியிருப்பார்கள். கொஞ்ச நஞ்சமாகவா ஆடினார்கள். பணபலம் கொண்டும் அதிகார பலம் கொண்டும் வெற்றிபெற்றுவிடலாம் என்று நினைத்த பெருந்தலைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போயினர். உண்மையில் இது அ.தி.மு.க அணிக்குக் கிடைத்த வெற்றியா?. இப்படி ஒரு இமாலய வெற்றியை அந்த அணியினர் நினைத்தாவது பார்த்திருப்பார்களா? அவர்கள் அந்த அளவிற்கு உழைப்பைக் கொடுத்தார்களா? அவர்களின் கூட்டணிக்குள்ளேயே எத்தனை எத்தனை சிக்கல்கள் இருந்தன. ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் கூட்டணிக்கட்சித் தலைவர்கள் ஒன்றுபோல தோன்றமுடியாத அளவிற்கு ஈகோ பிரச்சனைகள் தலைவிரித்தாடின. நியாயமான பிரச்சனைகளைப் பேசுவதை விடுத்து குடிகாரன், கோபக்காரன் என்றெல்லாம் பிரச்சாரங்கள் முன்வைக்கப்பட்டன. அக்கூட்டணியின் பிரதான அங்கத்தினரான தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் ஒரு பிரச்சாரக்கூட்டத்தில் தன் கட்சியின் வேட்பாளரை அடித்ததைப் பார்த்தோம். இப்படி பலப்பல மைனஸ்கள் இருந்தும் அவர்கள் பெற்ற இந்த மெகா வெற்றிக்குக்காரணமே ஆளும் தி.மு.க அரசின் மீதிருந்த கோபமே.

ஈழத்தில் நம் மக்கள் கொத்துக்கொத்தாக கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது உண்ணாவிரத நாடகமாடியவர்கள், வாய் மூடி மௌனியாக இருந்தவர்கள், கொலைகாரக் கும்பலுடன் கூட்டணி வைத்திருந்தவர்கள், ஒரு பெரும் குடும்பத்திற்காக நாட்டு நலனைக் கிஞ்சித்தும் எண்ணிப்பார்க்காதவர்கள், மீனவர் படுகொலைகளைத் தடுக்கத் திராணியற்றவர்கள், குறைந்தபட்சம் மீனவர் படுகொலைகளுக்கு எதிராக நேர்மையான கோபத்தைக்கூட வெளிப்படுத்தாதவர்கள், தமிழ்நாட்டையே இருட்டு மாநிலமாக்கியவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டது மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது. அதே நேரம் இப்போது ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் அ.தி.மு.க அரசு தங்கள் முந்தைய தவறுகளிலிருந்து பாடம் கற்று நல்லாட்சியை வழங்கவேண்டும் என்ற ஏக்கமும் ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு. முதல்வர் ஜெயலலிதா, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் இருவருமே இந்த வெற்றிக்குத் தகுதியானவர்களாக தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும். அதுதான் ஓட்டுப்போட்டு அவர்களை உயரத்தில் வைத்த மக்களுக்குச் செலுத்தும் உண்மையான நன்றியாகும்.

=========================

58 வது தேசிய திரைப்பட விருதுகளில் பெரும்பாலானவற்றை தமிழ் சினிமா கைப்பற்றியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. முக்கியமாக ஆடுகளம் படத்திற்கு ஆறு விருதுகள் கிடைத்திருப்பது தமிழ் சினிமாவின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்கிறது. ஆடுகளம், தென்மேற்குப் பருவக்காற்று, மைனா என்று தமிழ் மண்ணிலிருந்து முளைத்து வந்த கதைகள் விருதுகளைக் கைப்பற்றியிருப்பது அந்தப் படைப்புகளுக்கும் அதன் கலைஞர்களுக்கும் செய்யப்பட்ட மரியாதையாகும். ஆடுகளம் படம் பற்றி முன்பே ஒரு பதிவு எழுதி வைத்திருந்தேன். காலதாமதமானதால் பதிவிட இயலவில்லை. சேவல் சண்டை தென் தமிழகத்தின் முக்கியமான கலைகளில் ஒன்று. சேவல் சண்டை பற்றி எஸ்.ரா தனது நூல் ஒன்றில் மிக விரிவாக ஒரு கட்டுரை எழுதியிருப்பார். சேவல் சண்டையின் நுணுக்கங்களையும் அதனை நடத்துபவர்களின் இயல்புகளையும் பிரதிபலிக்கும் ஒரு நாவல் எழுதவேண்டும் என்று எஸ்.ராவிற்கு விருப்பம் இருந்ததாகவும் இப்போதுவரை அது கைகூடாமலே போய்க்கொண்டிருக்கும் வருத்தத்தையும் அதில் பதிவு செய்திருப்பார்.

எங்கள் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடக்கும் சேவல் சண்டைகளைப் பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒருமுறையாவது சேவல் சண்டையை நேரில் காணவேண்டும் என்ற ஆவல் இருந்ததுண்டு. எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் கன்னிசேரி கண்மாய் அருகில் சேவல் சண்டை விடுவதாக பேசிக்கொள்வார்கள். சென்று பார்ப்பதற்கு வீட்டில் அனுமதி கிடைக்காது. ரகசியமாக அனுமதியின்றி நடக்கும் விளையாட்டு அது. எஸ்.ராவின் கட்டுரை வழியாக அதன் நுட்பங்களை தெரிந்துகொண்டபிறகு சேவல் சண்டையின் மீது பெரும் விருப்பம் ஏற்பட்டுவிட்டது. இனி எப்போதாவது வாய்ப்புக்கிடைத்தால் தவறவிடக்கூடாது என்றிருக்கிறேன்.

சேவல் சண்டையின் நுட்பங்களையும் அதில் புழங்கும் மனிதர்களின் இயல்புகளையும் ஆடுகளத்தில் வெற்றிமாறன் காட்டியிருந்த நேர்த்திக்கு இந்த விருது தகுதியானதுதான். பார்த்துப் பார்த்து செதுக்கும் சிற்பம் போல ஒவ்வொரு காட்சியையும் கூடுதல் கவனத்துடன் நேர்த்தியாக இழைத்திருந்தார். அவருக்கும் ஆடுகளத்தின் ஏனைய கலைஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். முக்கியமாக தனுஷ். இளைய தலைமுறை நடிகர்களில் தனித்து கவனம் பெறுபவர் தனுஷ். காதல் கொண்டேன், பொல்லாதவன் என அவரின் பதிவுகள் அழுத்தமானவை. மாப்பிள்ளை போன்ற குப்பைகளிலிருந்து விடுபட்டால் தனுஷ் பெரிய உயரம் செல்வார்.

விருது வென்ற சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா, தினேஷ், கிஷோர் உள்ளிட்ட ஏனைய கலைஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். பொதுவாக விருதுகள் எப்போதுமே சர்ச்சைக்குரியவை. நியாயமான தீர்ப்பாக இருந்தாலும் சர்ச்சை எழுவது சகஜமே. இந்த முறை நந்தலாலா, அங்காடித்தெரு போன்ற படங்களுக்கு ஏன் விருது இல்லை என்று சில நண்பர்கள் கோபப்பட்டிருந்தனர். உண்மையில் அங்காடித்தெரு, நந்தலாலா, விண்ணைத்தாண்டி வருவாயா என்று நேர்த்தியான தரமான விருதுக்குத் தகுதியானவைகளாக பல சினிமாக்கள் தமிழிலிருந்து உருவாகி வருவது மிக மிக ஆரோக்யமான ஒன்றாக இருக்கிறது. வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கட்டும்.

=========================

திரைப்பட விருதுகள் பற்றிப் பேசும்போது எஸ்.ராவிற்குக் கிடைத்த தாகூர் இலக்கிய விருது நினைவுக்கு வருகிறது. எஸ்.ரா எப்போதுமே என் மனதுக்கு மிக நெருக்கமானவர். தமிழ் வாசகப் பரப்பின் வாசிப்பு எல்லையை விரிவுபடுத்தியதில் எஸ்.ராவுக்கு முக்கிய பங்கு உண்டு. அவரது யாமம் நாவலுக்காகக் இந்த விருது கிடைத்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி. அன்பிற்குரிய எஸ்.ரா அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன். இந்த செய்தி கொஞ்சம் பழையதுதான். ஏற்கனவே எல்லோருமே வாழ்த்தி மகிழ்ந்திருப்பீர்கள். நான் கொஞ்சம் தாமதமாகவேனும் இந்த சந்தோஷத்தில் பங்கெடுத்துக்கொள்கிறேன்.

=========================

பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியிருக்கின்றன. சென்ற ஆண்டைவிட அதிகமான தேர்ச்சி சதவீதம், 5 மாணவிகள் மாநிலத்தில் முதலாவதாக வந்து அசத்தியிருக்கிறார்கள். இதில் அரசுப் பள்ளி மாணவியும் உண்டு. இதுதான் கூடுதல் மகிழ்ச்சியளிக்கிறது. அரசுப்பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டால் இந்த சதவீதம் இன்னும் கூடுமென்பது உறுதி. இரண்டாவது இடத்தில் 11 பேர், மூன்றாம் இடத்தில் 24 பேர் என்று வந்திருக்கும் செய்திகளைக் கேட்பதற்கே சந்தோஷமாக இருக்கிறதல்லவா. இந்தக் கொண்டாட்டம் தொடரட்டும். மாணவ மாணவிகள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

=========================

சவுதியில் வெயில் தொடங்கிவிட்டது. எடுத்த எடுப்பிலேயே அடித்துத் துவைப்பது இந்த வெயிலின் இயல்பு. இப்போதே இப்படியெனில் இன்னும் ஜூன், ஜூலையை நினைத்தால் கலக்கமாக இருக்கிறது. கொடுமையான தனிமையும் உக்கிரமான வெப்பம் கொண்ட நீண்ட பகல்பொழுதுகளுமாகக் கடந்துபோகின்றன நாட்கள். தேவதேவனின் தனிமரம் கவிதை நினைவுக்கு வருகிறது.

ஒரு யாத்ரீக வீரன்

சற்றே இளைப்பாறும் இடம்

அவனது தரிசனம்

அதைச்சுற்றி விரிந்திருக்கிறது

ஓய்வுகொள்ள முடியா பாலை ஒன்றின்

கால் பொசுக்கும் மணல்

தன் இனத்தைவிட்டு

தூரவிலகி நிற்கிறது அது

தன்னியல்பின்

தடையற்ற வளர்ச்சிக்காக

காற்றும் மழையும் ஒளியும் பறவைகளும்

புழுப்பூச்சிகளும் உள்ளவரை

தனிமை அதற்கில்லை

அது ஏழையல்ல

அது தனக்குள் வைத்திருக்கிறது

ஒரு சோலைவனக்காட்டை

அதுவே தருகிறது

வற்றாத நீர்பெருக்கை

அது நிற்குமிடம்

இல்லை அது இளைப்பறும் இடம்

தனதே தனதான நிழல்

அதன் தரிசனம்

- தேவதேவன்

6 கருத்துரைகள்:

ரோகிணிசிவா சொன்னது…

நல்ல பகிர்வு

பட்டாபட்டி.... சொன்னது…

வாவ்...

மோகன் குமார் சொன்னது…

நீண்ட நாள் கழித்து வந்தாலும் பல விஷயங்கள் மனம் விட்டு பேசி உள்ளீர்கள் சரவணா

பிரபாகர் சொன்னது…

பகிர்ந்த விதம் அருமை.

தேர்தலைப் பற்றிய உமது எண்ணமும் எனது எண்ணமே..

உங்களைப்போலவே சேவல் சண்டையினைப் பார்க்கவேண்டும் என ஆர்வம் ஏற்பட்டது!...

மொத்தத்தில் பல விஷயங்களில் இருவரின் எண்ணங்களும் ஒத்துப்போகின்றன நண்பா!...

பிரபாகர்...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ சொன்னது…

கொடுமையான தனிமையும் உக்கிரமான வெப்பம் கொண்ட நீண்ட பகல்பொழுதுகளுமாகக் கடந்துபோகின்றன நாட்கள்.///

மனம் தளராத மகிழ்சி என்றும் பொங்கட்டும்! :))

செ.சரவணக்குமார் சொன்னது…

@ ரோகிணி சிவா
நன்றி டாக்டர்.

@ பட்டாபட்டி
நன்றி நண்பா.

@ நன்றி மோகன் குமார்.

@ நன்றி பிரபா.

@ நன்றி ஷங்கர்.