
2007 ம் ஆண்டு முதல் முறையாக சவுதிக்கு வந்தபோது எனக்கிருந்த மிகப்பெரிய வருத்தமெல்லாம் பிறந்து நான்கு மாதங்களேயான எனது மகளைப் பிரிந்திருக்கப்போகும் துயரம் மட்டும் தான். மகள் தான் பிறக்கும் என்று நம்பிக்கையோடும் ஆசையோடும் காத்திருந்தேன். நினைத்ததுபோலவே ஒரு குட்டி தேவதை என் வாழ்வை அர்த்தமாக்குவதற்கென்றே வந்தாள். மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் மருத்துவமனையில் என் மனைவியின் தங்கை கையில் இருந்து என் செல்லத்தை முதல் முறையாக என் கைகளில் ஏந்திக்கொண்டபோது நான் அடைந்த ஒரு அற்புதமான உணர்வை எப்படி சொல்வேன் நண்பர்களே. அதுதான் ஆனந்தம். பூரிப்பு, உற்சாகம், உவகை, கண்ணீர் என்று கலவையான நிமிடம் அது. தந்தைகளின் உலகத்தின் அதி அற்புதமான நிமிடம் அதுவாகத்தானே இருக்கும்.
மனதிற்கு நெருக்கமான படைப்பாளியின் புத்தகத்தை வாசிக்கையில், ஒரு அற்புதமான இலக்கியப் பிரதிக்குள் மூழ்கிப்போகையில் எனது செல்லத்தை ஏந்திக்கொண்ட நிமிடத்தின் சந்தோஷத்தை அனுபவித்துக்கொண்டே இருக்கிறேன். ஒரு குழந்தையைக் கையாள்வதைப்போலத்தானே புத்தகங்களையும் கையாளவேண்டும்.
புத்தகங்களின் மீதான எனது தீராத காதல் மட்டுமே எந்த ஒரு சூழ்நிலையிலும் எத்தனை கஷ்டத்திலும் என்னைச் சோர்ந்துபோகாதிருக்கச் செய்கிறது. சிறு வயதிலேயே தொடங்கிவிட்ட பித்து நிலை இது. எனது பள்ளிப்பருவத்தில் நாங்கள் எங்கள் அம்மா வழித் தாத்தாவிற்குச் சொந்தமான ஓட்டு வீடொன்றில் குடியிருந்தோம். ஒரு ஹால், ஹாலையொட்டி சின்னதாக ஒரு குளிக்கும் இடம்(கதவு வைத்த குளியலறை அல்ல அது), சின்னதாக ஒரு சமையல்கட்டு, ஒரு மச்சுவீடு (அம்மாவின் மொழியில் சொல்வதென்றால் சாமி ரூம்). அந்த மச்சு வீடு தான் எனக்கும் என் தம்பிக்குமான படிக்கும் அறையாகவும் இருந்தது. அலமாரிகளுக்கும் எனக்கும் எப்போதும் ஒரு ராசி உண்டு. புத்தகங்களை ஒழுங்காக அடுக்கிவைக்கவே மாட்டேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்தில் இறைந்து கிடக்கும். எனக்கு விருப்பமான புத்தகங்கள் எப்போதும் என் கண்பார்வையிலேயே இருக்கவேண்டும். அலமாரியில் ஒழுங்காக அடுக்கிவைத்து தேவையான நேரத்தில் தேடும்படி இருப்பது எனக்கு அறவே பிடிக்காத ஒன்று.
ஆனால் பின்னாட்களில் ஒரு ஒழுங்குமுறை கைவந்தது. புத்தகங்களை வரிசையாக அடுக்கிவைத்து ஒரு நூலக மாதிரியைப்போல உருவாக்கவேண்டும் என்று விரும்பினேன். இந்த ஒழுக்கக்கட்டுப்பாட்டை என் தந்தையிடம் இருந்தே கற்றுக்கொண்டேன். வீட்டில் ஒரு குண்டூசி எங்கிருக்கிறது என்று கேட்டால்கூட சரியாக சொல்லிவிடும் அளவிற்கு எந்தெந்த பொருள் எந்தெந்த இடத்தில் இருக்கிறது என்பதை சரியாக சொல்லும் நபர் அப்பா மட்டும் தான். இப்போதுவரை அப்படித்தான் இருக்கிறது.
பின்னர் நூலக உறுப்பினராகி நூல்களை விரும்பி வாசிக்கத் தொடங்கியபின் எனது விருப்பமெல்லாம் புத்தகங்கள் மட்டுமே என்று ஆகிப்போனது. வீட்டில் கொடுக்கும் காசை சேர்த்துவைத்து ஒவ்வொரு நூலாக வாங்கி வாங்கி சேர்த்தபடியிருந்தேன். என்னென்ன நூல்களையெல்லாம் அப்போது வாங்கினேன் என்று நினைத்தால் கொஞ்சம் சிரிப்பாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கும். இப்போதும் அவற்றில் சில என் கையிருப்பில் உண்டு. மற்ற நூல்களை காலம் கொண்டுபோய்விட்டது. தமிழின் அற்புதமான இலக்கியங்களையெல்லாம் ஒன்று விடாமல் வாசித்துவிடவேண்டும் என்ற வெறி சென்னைக்கு வந்தபிறகு தான் ஏற்பட்டது. கன்னிமாரா நூலகம், தேவநேயப்பாவாணர் நூலகம் (இதில் நான் உறுப்பினர்) என்று என் பொழுதுகளையெல்லாம் வீணாகாமல் பார்த்துக்கொண்டேன்.
புத்தக சேகரிப்பும், வாசிப்புமே என் சுவாசமாக இருந்த காலகட்டத்தில்தான் சவுதி பயணம் முடிவானது. என் குழந்தையைப் பிரிந்திருக்கும் கவலையோடு குழந்தைபோலான என் புத்தகங்களையும் பிரிந்திருக்கவேண்டுமே என்ற கவலையும் தொற்றிக்கொண்டது. முக்கியமான ஒரு பத்து நூல்களை மட்டுமாவது எடுத்துச்சென்றுவிடவேண்டுமென்று விரும்பினேன். ஆனால் அந்தப் பத்தைத் தேர்ந்தெடுப்பது பெரும் சிரமமாக இருந்தது. எதை எடுப்பது எதை வைப்பது என்று தெரியாமல் துணிக்கடையில் செலக்ஷனுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் பெண்ணைப்போல குழம்பிப்போனேன். இடையில் அம்மாவும் அக்காவும் எனது பெட்டியை துணிமணிகள், சோப்பு, சீப்புக் கண்ணாடிகளால் முழுதும் நிறைத்துவிட்டார்கள். நிரம்பி வழிந்த பெட்டியையும் பாரதியின் கவிதை நூலையும் மட்டும் கையில் எடுத்துக்கொண்டு சவுதிக்குக் கிளம்பிவிட்டேன்.
நமக்கு விருப்பமானவற்றிலிருந்து விலகியிருக்கும்போதுதானே அதன் மீது பிரியமும் அன்பும் வழக்கத்திற்கு அதிகமாகப் பொங்கி வழியும். எனக்கும் அப்படித்தான் இருந்தது. வீடு, வேலை என்று சோர்வாகப்போய்க்கொண்டிருந்த வாழ்க்கை இணையத்தில் நுழைந்தவுடன் உற்சாகம்கொள்ளத் துவங்கியது. இணையத்தில் பி.டி.எஃப் கோப்புகளாகக் கிடைத்த தமிழ், ஆங்கில நூல்களை வாசிப்பதையே பேரின்பமாகக் கருதினேன். இந்த மின்நூல் வடிவம் மிக நன்றாக இருக்கிறதே தமிழின் முக்கியமான படைப்பாளிகள் அனைவரின் நூல்களும் மின்நூல் வடிவில் கிடைத்தால் நூல்களைத்தேடி அலையவேண்டாமே என்றும் ஒரு பேராசை தோன்றியது. அப்போது தான் முதல்முறையாக எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களுக்கு ’தங்கள் நூல்கள் மின்நூல் வடிவில் கிடைக்குமா?’ என்று ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். உடனே பதில் வந்தது. ’இல்லை’ என்று. அதன்பின்னர் மின்னூல் தேடுவதே பிழைப்பாகிப்போனது.
இணையத்தில் நவீன கணினி தொழில் நுட்பப் பதிவுகள் எழுதும் அண்ணன் பி.கே.பி அவர்களின் பதிவுகளுக்குத்தான் நான் முதல்முறையாகப் பின்னூட்டமிட்டேன். காரணம் அவர் தனது ஒவ்வொரு பதிவுடனும் ஒரு மின்னூலை கொடுத்துக்கொண்டிருந்தார். தாகத்தில் நாக்கு வறண்டு கிடப்பவனுக்கு ஒரு பெரிய அருவியே கிடைத்தைப்போல துள்ளிக்குதித்து மகிழ்ந்தேன். ’பி.கே.பி ஐயா.. நீங்க நல்லா இருக்கணும் ராசா’ என்று அவருக்குப் பின்னூட்டமிட்டதாக நினைவு. அப்போது வலைப்பதிவு தொடங்கியிருக்கவில்லை நான். மனதளவில் இப்போதும் பி.கே.பி அவர்களுக்கு நன்றி சொல்கிறேன். பின்னர் சங்கப்பலகை என்றொரு தளம் அறிமுகமானது. தெரியாத்தனமாக அதில் உறுப்பினராகித் தொலைந்துவிட்டேன். ஒரு நாளைக்கு பத்துக்கும் மேற்பட்ட மெயில்கள் அனுப்பி உயிரை எடுத்துக்கொண்டிருந்தனர். அது மின்னூல்களை விற்பனை செய்யும் தளம். அதன் தரத்திலும், செயல்பாட்டிலும் எனக்கு நம்பிக்கை இல்லாததால் சங்கப்பலகையில் மனம் நாட்டம் கொள்ளவில்லை. முக்கியமான பிரச்சனை பணம் அனுப்பும் வழிமுறைகள் கொஞ்சம் கடினமாக இருந்ததாக நினைவு.
வீட்டிற்குக் போன் செய்து ’எனது நூல்களை பார்சலில் அனுப்பமுடியுமா?’ என்று கேட்டேன். ’இதெல்லாம் வேண்டாத வேலை’ என்று திட்டி பதில் வந்தது. அந்த நேரத்தில் தொடர்ந்து பதிவுகளை வாசித்துக்கொண்டிருந்ததாலும், எஸ்.ரா, ஜெமோ, சாரு, உயிர்மை, காலச்சுவடு என்று நவீன இலக்கியப் படைப்பாளிகள், இலக்கிய இதழ்கள் என்று இணையத்திலேயே நிறைய கிடைத்துக்கொண்டிருந்ததாலும் இணையமே நூலகமாகப் போய்விட்டது எனக்கு. வாங்கவேண்டிய நூல்களை எல்லாம் வரிசையாகப் பட்டியலிட்டபடியேயிருந்தேன். முன்னர் வாசித்த சில நூல்களைப் பற்றிய எனது வாசிப்பனுவத்தையும் எழுதத் தொடங்கினேன். இருந்தாலும் எப்போதடா ஊருக்குச்செல்வோம் புத்தகங்களை வாங்கிக் குவிப்போம் என்றிந்தது.
அந்த நேரத்தில் என் கேரள நண்பன் விஜீந்த் விடுமுறையில் ஊருக்குச் சென்றான். அவனிடம் ஒரு பட்டியலைக்கொடுத்து ’தயவுசெஞ்சு வாங்கிட்டு வாடா ஒனக்குக் கோயில் கட்டிக்கும்புடுறேன்’ என்று சொல்லியனுப்பினேன். அவனுக்குக் கோயில் மனதில் கட்டியிருக்கிறேன். அவனது லக்கேஜ்களைக் குறைத்துக்கொண்டு எனது புத்தக மூட்டையைத் தூக்கிக்கொண்டு வந்திருந்தான். எப்படி இவ்வளவு நூல்களையும் தேடிப்பிடித்து வாங்கினான் என்று வியப்பாக இருந்தது. கிடைக்காமல் கிடைத்த அற்புதமான நூல்கள் என்னை முழுவதுமாக ஆக்ரமித்துக்கொண்டன. சவுதியில் இருந்தால் என்ன உலகின் எந்த மூலையில் இருந்தால் என்ன? ஒரு நோக்கத்தில் தீவிரமாக இருந்தால் அது கிட்டாமல் போய்விடுமா? எனது நேசத்திற்குரிய படைப்பாளிகள் எல்லாம் இப்போது எனது அறையில் இருந்தார்கள். மனது கொள்ளாத சந்தோஷம் அப்போதும். அலுவலகம் முடிந்து அறைக்குத் திரும்பியதும் புத்தகமே கதி என்று இருந்தேன். ‘டேய் எங்களுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கு, இப்பிடின்னு தெரிஞ்சிருந்தா வாங்கிட்டே வந்திருக்கமாட்டேன்’ என்று விஜீந்தும் சங்கரும் அலுத்துக்கொண்டனர். நான் எதையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. வாசித்து வாசித்து தீர்த்துக்கொண்டிருந்தேன். இந்த நூல்களையெல்லாம் வாசித்து முடிக்கும்போது அடுத்து ஒரு பார்சலை பெற்றுவிட வேண்டும் என்ற தீவிரமான நோக்கமும் இருந்தது. அப்போதுதான் உடுமலை.காம் தளம் அறிமுகமானது. விரும்பிய நூல்களைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பும் கிடைத்தது. நூல்களை அந்தத் தளத்தில் இருந்து வாங்குவதற்கு எளிய வழிமுறைகளை வகுத்திருந்தனர் அதன் நிர்வாகிகள். உடுமலை.காமின் திரு.சிதம்பரம் என் நன்றிக்குரியவர். இப்படித்தான் சவுதியில் எனது புத்தக அறை உருவானது.
நூல்களை வாசிப்பதென்பது தவம்போல என்று சொல்வார்கள். தவத்தினை விடவும் மேன்மையானதொரு உயர் செயல் என்பது எனது கருத்து. என்னைப்பொறுத்தவரை எந்த நூலையும் மேலோட்டமாக வாசிக்கவே மாட்டேன். ஆழ்ந்த வாசிப்பே என் வழக்கம். ஒன்றிற்கு இரண்டு முறை கட்டாயம் வாசித்துவிடுவேன். கொஞ்சகாலம் கழித்து திரும்பவும் அதை வாசிப்பேன். ஒரு நூலை வாசித்து முடித்தவுடன் எப்போது அதை திரும்பவும் வாசிக்கவேண்டும் என்று மனதிற்குள்ளேயே ஒரு கால அட்டவணையை உருவாக்கிக்கொள்வேன்.
நண்பர்களுக்குப் பரிசளிப்பதற்கு நூல்களே எப்போதும் என் தேர்வு. நூல்களை இரவல் கொடுக்கும் பழக்கம் எனக்கு உவப்பானதில்லை. நெருக்கமான நண்பர்கள் கேட்கும்போது மறுக்காமல் கொடுத்துவிடுவேன். அரிதாக சில நேரங்களில் திரும்பி வரும். அதற்காகக் காத்திருக்காமல் வேறொரு பிரதி வாங்கி வைத்துக்கொள்வேன். சவுதியில் படாதபாடுபட்டு நான் வாங்கிய சில புத்தகங்கள்கூட இரவல் போய் திரும்பி வராமல் போயின. வாங்கிக்கொண்டுபோன நண்பர் தொடர்பு எல்லைக்கு அப்பாலேயே எப்போதும் இருக்கிறார். வாழ்க. கடந்த இரண்டு விடுமுறைகளில் ஊருக்குச்சென்று திரும்பியபோதும் புத்தக மூட்டைகளோடே வந்ததால் இப்போது நூற்றுக்கும் அதிகமான புத்தகங்கள் சேர்ந்துவிட்டிருக்கின்றன. வாசிக்கும் ஆர்வம் உள்ள சவுதி நண்பர்களுக்கு அவற்றைத் தரத் தயாராக உள்ளேன்.
வாசிக்கும் பழக்கம் கேலிக்குள்ளாக்கப்பட்டு நூல்களை வாசிப்போர் கோமாளிகளைப்போல பார்க்கப்படும் காலம் இப்போது இருக்கிறது. வாசிப்புப் பயிற்சி இல்லாத ஒரு தலைமுறை உருவாகிக்கொண்டிருக்கிறது என்பதே வேதனையான உண்மை. காதலர் தினம், நண்பர்கள் தினத்தையெல்லாம் உற்சாகமாகக் கொண்டாடித்திளைக்கும் நம் மக்களும் வியாபார நிறுவனங்களும், ஊடக வியாபாரிகளும் உலக புத்தக தினத்தையும் கொஞ்சம் கவனிக்கவேண்டும். வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் எந்த ஒரு சக்தி வாய்ந்த ஊடகமும் இன்று நம்மிடையே இல்லை. இது எத்தனை கேவலமான ஒரு கலாச்சார சீர்கேடு. புத்தகங்களுக்கென்றே ஒரு தினம் இருப்பது எத்தனை மகிழ்வான ஒன்று. வாருங்கள் நண்பர்களே ஒரு மகத்தான தினத்தைக் கொண்டாடி மகிழ்வோம், விருப்பமானதொரு நூலை வாசித்தபடியே.
20 கருத்துரைகள்:
சகோ.மகளைப் பற்றிய பகிர்வு நீங்கள் அவள் மீது நீங்கள் கொண்டிருக்கும் அன்பை பறைசாட்டுகிறது..நீங்கள் ஒரு புத்தகப்பிரியர் என்பதையறிந்து மிக்க மகிழ்ச்சி.அதனால் தான் ஒவ்வொரு பகிர்வும் அத்தனை நேர்த்தி.படித்ததின் பலன்..உங்கள் ஊர் பக்கம் இருந்தால் இரவல் வாங்கியாவது அத்தனையும் நானும் வாசித்திருப்பேன்..
எனக்கும் ஒரே மகள்.என் மனதில் நிகழ்ந்த ரசாயண மாற்றத்தை அப்படியே எழுத்தில் வடித்துள்ளீர்கள்.
ஒரு அற்ப்புதமான புத்தகம் பற்றி பதிவு எழுதியுள்ளேன்.வந்து பார்த்து கருத்துரைக்கவும்.
எதிர்ப்பும் எழுத்தும்
///வாசிக்கும் பழக்கம் கேலிக்குள்ளாக்கப்பட்டு நூல்களை வாசிப்போர் கோமாளிகளைப்போல பார்க்கப்படும் காலம் இப்போது இருக்கிறது. வாசிப்புப் பயிற்சி இல்லாத ஒரு தலைமுறை உருவாகிக்கொண்டிருக்கிறது என்பதே வேதனையான உண்மை. காதலர் தினம், நண்பர்கள் தினத்தையெல்லாம் உற்சாகமாகக் கொண்டாடித்திளைக்கும் நம் மக்களும் வியாபார நிறுவனங்களும், ஊடக வியாபாரிகளும் உலக புத்தக தினத்தையும் கொஞ்சம் கவனிக்கவேண்டும். வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் எந்த ஒரு சக்தி வாய்ந்த ஊடகமும் இன்று நம்மிடையே இல்லை. இது எத்தனை கேவலமான ஒரு கலாச்சார சீர்கேடு. புத்தகங்களுக்கென்றே ஒரு தினம் இருப்பது எத்தனை மகிழ்வான ஒன்று. வாருங்கள் நண்பர்களே ஒரு மகத்தான தினத்தைக் கொண்டாடி மகிழ்வோம், விருப்பமானதொரு நூலை வாசித்தபடியே.////
நல்ல பதிவு புத்தகதினத்தின் பொழுது வெளியிட்டதற்க்கு நன்றி..
புத்தகங்களைப் பார்க்கும் போதெல்லாம் பையில் இருக்கும் காசு காணாமல் போய்விடும். என்ன விலை என்று கூட யோசிப்பதில்லை. அப்படியே வாங்கி விடுவதுண்டு. வீட்டுக்குள் வைக்க இடமில்லை என்ற போது இழந்த அந்த புத்தகங்கள் கொடுத்த அனுபவங்கள் மட்டும் இன்றும் என்னுடன் இருக்கிறது. ஆனால் புலம் பெயர்ந்தும் உங்கள் ஆர்வம் ஆச்சரியமே.
நண்பரே,
//புத்தகங்களின் மீதான எனது தீராத காதல் மட்டுமே எந்த ஒரு சூழ்நிலையிலும் எத்தனை கஷ்டத்திலும் என்னைச் சோர்ந்துபோகாதிருக்கச் செய்கிறது.//
நிஜமான வார்த்தைகள். இப்பதிவின் உச்ச பிரகாசமாக இவ்வார்த்தைகள் எனக்கு தென்படுகின்றன. நீங்கள் ஆசைப்படவற்றையெல்லாம் வாசிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். ஒவ்வொரு முறையும் நூலகங்களிற்கு செல்லும்போதும் புத்தக அடுக்களில் கவர்ச்சியாக வீற்றிருக்கும் நூல்கள் எல்லாவற்றையும் வாசித்துவிட வேண்டும் எனும் பேராசையும் அது முடியாத ஒன்று எனும் உண்மையும் ஒருங்கே எழும். அத்தருணம் தரும் இதமான சோகம் வர்ணிக்க இயலாத ஒன்று. புத்தக அடுக்களில் இருக்கும் புத்தகங்களின் முதுகளை தடவிக் கொடுப்பதே ஒரு சுகம்தான். போட்டோ பிரமாதம்.
நான் புத்தகத்தில் எழுதும் ஒரு வாசகம் இது,
வேண்டுதல் அவரவற்கு விருப்பாம்,அதை திரும்பத் தருதல் பொருப்பாம்,என்பதே அது,அதுபோல புத்தகத்தை திரும்பத்த தராமல் போனாலும் மன்ன்னிப்பேன்,அதுபோல ஏகம் போயுள்ளது,ஆனால் புத்தகத்தை கிழித்து கசக்கி,பக்கங்கள் காணாமல் அடித்து,அட்டைகள் விண்டு வரும் நிலையில் இந்தா உன் பொல்லாத புத்தகம் என்று கொடுப்பவர்கள் நட்பை உடனே முறித்திருக்கிறேன்.நண்பா,இன்னும் நிறைய பகிருங்கள்,உங்கள் அறையும்,புத்தக அலமாரியும் அருமை.
இன்னுமொரு புத்தகப் பைத்தியத்தின் பாராட்டுகள்.
உலக புத்தக தினத்தன்று நல்ல பகிர்வு சரவணா.
நல்ல வாசிப்புத்திறன் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. கொடுத்துவைத்தவர் நீங்கள்.
டிவி பார்ப்பதை விட புத்தகம் வாசித்தல் சுவாரஸ்யமான விசயம்.
உங்கள் மகளின் மீது உள்ள பிரியத்தை புத்தகத்துடன் ஒப்பிட்டதை மிகவும் ரசித்தேன்....
தங்கள் புத்தக அறையில் உள்ள புத்தகங்கள் பெயர்களையும் வெளியிடுங்கள்
என்னை போன்ற புத்தக பிரியர்களுக்கும் உதவியாய் இருக்கும்....
வழக்கம் போல் நல்ல பகிர்வு சரவணா
சரவணனும் ஒரு புத்தகம்தானே!!!!
ஆக்கமான பதிவு...
உங்களது வாசிப்பில் 'தவிர்க்க இயலாத புத்தகப் பட்டியல்' ஒன்றையும் சேர்த்து வெளியிட்டிருக்கலாம்..
இப்போதும் ஒன்றும் தாமதமில்லை.
:)
நானும் இங்கு ஆன்லைனில் தான் நிறைய புத்தகங்களை வாசிக்கிறேன் சரவணன்.. சவுதியில் இருந்திருந்தால் உங்களிடம் நானும் புத்தகம் கேட்டிருப்பேன்.. :)
ஆன்லைனில் வாசிப்பது, கையில் புத்தகத்தைப் பிடித்து, படுத்தோ உட்கார்ந்தோ என விரும்பிய நிலையில், விரும்பிய நேரத்தில், புதுப்புத்தகத்தின் மணத்தை முகர்ந்துகொண்டே வாசிப்பதற்கு கொஞ்சமும் ஈடாகவே இல்லை. எனினும், வேறு வழியில்லாததால், ஏதோ வாசிக்கிறேன். :-))))
நீங்க சொன்னதுபோல் வாசிப்பதென்பது, குறைஞ்சுக்கிட்டு வர்றதுக்கு டிவியும் ஒரு காரணம்.அதேமாதிரி புத்தகங்களுக்காக செலவிட்டா, அது வீண்செலவாவும் பார்க்கப்படுது. ஆனாலும், முழுக்கமுழுக்க குறையாம காப்பாத்திக்கிட்டு வர்ற இளைய தலைமுறை இருக்கத்தான் செய்யுது. குறைஞ்சபட்சம் மின்னூல்களையாவது வாசிக்கத்தான் செய்யறாங்க.
வாசிப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. புத்தகம் கிடைத்தால் போதும் முடிக்காமல் கீழே வைப்பதில்லை.
மிக அருமையாக தொகுத்து வழங்கிருக்கீங்க. பாராட்டுக்கள்..
உலக மக்கள் அனைவரும் சாவதற்குள் படித்துவிட வேண்டிய சில புத்தகங்களின் பட்டியல் இதோ. . இவை உங்களிடம் இல்லையெனில், கண்ணிருந்தும் குருடராகவே வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் என்று பொருள்..
1 - பொன்னர் சங்கர்
2 - நெஞ்சுக்கு நீதி
3 - உரோமாபுரிப் பாண்டியன்
4 - குறளோவியம்
5 - தென்பாண்டி சிங்கம்
இவை எல்லாம், உலக இலக்கியத்தில் தங்கக்கட்டிகளால் பதிந்து வைக்கப்படக்கூடிய அரியவகை இலக்கிய வகைகள். இப்புத்தகங்க்களின் ஒவ்வொரு எழுத்தும் அட்சரலட்சம் பெறும். இதனை எழுதிய உலக இலக்கிய நாயகன், தஞ்சை இரண்டாம் ராஜராஜ சோழன், மூன்றாம் புலிகேசி, நான்காம் குலோத்துங்க சோழன், ஐந்தாம் பாரி வள்ளல், தென்னாட்டு இடி அமீன், தமிழ்நாட்டு டான் பிரவுன், இந்திய இலக்கிய அபூர்வ சிகாமணி குலைஞர் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் அரசோச்ச வேண்டும்; அதனைப் பார்த்துப் பார்த்து புளகாங்கிதம் அடைந்திடல் வேண்டும். வாழ்க அன்னார். வளர்க அவர்தம் பணி.
உங்களின் பக்கத்துக்கு வர இன்றுதான் முடிந்திருக்கிறது.
உங்களின் பின்னூட்டங்களிலேயே நிறைய வாசிப்பனுபவம் கொண்ட உங்கள் பிம்பம் என் மனதில் வீழ்ந்ததுண்டு.என்ன செய்ய? நேரங்கள்தான் நம்மை இயக்குகின்றன.
புத்தகங்கள் மேலான உங்கள் காதலைச் சொல்ல இந்தப் பக்கம் போதுமானதல்ல என்றுதான் வாசித்தபின் தோன்றியது.
உங்களின் ஆழ்ந்த வாசிப்புக்கு ஒருவேளை அறையில் புத்தகங்கள் இல்லாதிருப்பின் சிறையாய் மாறியிருக்கும்.
அடிக்கடி இனி உங்கள் தளம் வருவேன் சரவணன்.
நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
வாசிக்கும் பழக்கம் கேலிக்குள்ளாக்கப்பட்டு நூல்களை வாசிப்போர் கோமாளிகளைப்போல பார்க்கப்படும் காலம் இப்போது இருக்கிறது. வாசிப்புப் பயிற்சி இல்லாத ஒரு தலைமுறை உருவாகிக்கொண்டிருக்கிறது என்பதே வேதனையான உண்மை// மிகவும் உண்மை சரவணகுமார்..:((
கருத்துரையிடுக